இலங்கையின் பல்லாயிரங்கோடி மதிப்பிலான மிகப்பெரிய இரத்தினக்கல் எது தெரியுமா?

இலங்கையின் (Sri Lanka) கனிய வளங்களில் அதிக அந்தியச் செலாவணியை ஈட்டித் தரும் கனியம் இரத்தினக் கற்களாகும்.

மிகப் பண்டைக் காலத்தில் இலங்கை இரத்தினக் கற்களுக்குப் புகழ் வாய்ந்ததாக இருந்துள்ளது. கிரேக்க, அராபிய, ரோம வர்த்தகர்கள் இலங்கைக்கு வந்து இரத்தினக் கற்களை வாங்கிச் சென்றுள்ளனர்.

அதனாலேயே இலங்கை ‘இரத்தினத் தீபம்’ என்ற பெயரைப் பெற்றது. இலங்கையில் இரத்தினபுரியே இரத்தினக் கற்களுக்கு முக்கியமான பகுதியாகும்.

அதனது பெயரே அந்த உண்மையைப் புலப்படுத்தும். இரத்தினபுரி சப்ரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ளது. அண்மைக்காலத்தில் ஒக்க்பிட்டி, அலகா ஆகிய பிரதேசங்கள் இரத்தினக்கல் அகழ்தலில் முக்கியம் பெற்றுள்ளன.

அத்துடன் பத்தலை, அவிசாவளை, பெல்மதுளை, பலாங்கொடை, றக்குவாணை என்பன இரத்தினக்கற்கள் காணப்படும் இடங்களாக உள்ளன.

இந்நிலையில் இலங்கையில் உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் கடந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த இரத்தினக்கல்லானது 802 கிலோ எடைகொண்டதுடன் இரத்தினக்கல்லின் பெறுமதி 15,000 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இரத்தினக்கல்லானது பதுளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இந்த இரத்தினக் கல்லில் அறுகோண இரு பிரமிடு வடிவம் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த மாதிரியானது இயற்கையான ஒளி ஊடுருவக்கூடிய நீல நிற கொருண்டம் என்ற படிகங்களைக் கொண்டுள்ளது. கொருண்டம் என்பது மிக முக்கியமான இரத்தின வகைகளில் ஒன்றாகும்.

உலக வளங்களில் கொருண்டம் குடும்பத்தின் மிகப்பெரிய நீல கொருண்டம் இது என கூறப்படுகின்றது பல இரத்தினங்கள் மற்றும் கொருண்டம் இனங்களின் படிகங்கள் பல்வேறு இரத்தினங்கள் உற்பத்தி செய்யும் நாடுகளில் காணப்படுகின்றன.

மேலும் இயற்கையாகவே இந்த அளவுள்ள கொருண்டம் படிகங்களின் கொத்துகள் வேறு எங்கும் பதிவாகியதில்லை. இது உலகின் அரிதான அருங்காட்சியக இரத்தினங்களில் ஒன்று என தெரிவிக்கின்றனர்.