காலையில் எப்போதும் ஒரே மாதிரி இட்லி, தோசை சாப்பிட்டு பழக்கமாகி விட்டதா? புதிதாக ஏதாவது சாப்பிட வேண்டும் நினைப்பவர்கள் ஆரோக்கியம் நிறைந்த அடை செய்து சாப்பிடலாம்.
அந்த அடையை வெறுமனே சாப்பிடலாம் அல்லது தேங்காய் சட்னி, தக்காளி சட்னியுடனும் சாப்பிடலாம்.
அந்த வகையில், வேர்க்கடலை பட்டாணி அடை ரெசிபி இலகுவாக செய்வது எப்படி? என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* பச்சை பட்டாணி – 1/2 கப்
* பச்சை வேர்க்கடலை – 1/2 கப்
* பச்சை மிளகாய் – 3
* மிளகு – 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் – தேவையான அளவு
* உப்பு – சுவைக்கேற்ப
* கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
* பச்சரிசி மாவு – 3 டேபிள் ஸ்பூன்
* நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
* சீரகம் – 1 டீஸ்பூன் * கடுகு – 1 டீஸ்பூன்
* பூண்டு – 10 பல் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* முருங்கைக்கீரை – 1 கைப்பிடி
அடை செய்வது எப்படி?
முதலில் பச்சை வேர்க்கடலை, பட்டாணி இரண்டையும் சுமாராக 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
அதன் பின்னர் ஒரு கணமான வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு, பூண்டு பற்கள் சேர்த்து வறுக்கவும்.
அதனுடன் வெங்காயம், உப்பு சேர்த்து நன்றாக வதங்கிய பின்னர் முருங்கைக்கீரையை ஒரு கைப்பிடி சேர்த்து கிளறினால் சுருங்கி கொஞ்சமாக வரும்.
அப்போது இறக்கி சூடு தணிந்தவுடன் மிக்சர் ஜாரில் ஊற வைத்த பச்சை வேர்க்கடலை, பட்டாணி, இஞ்சி, பச்சை மிளகாய், மிளகு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைக்கவும்.
அதோடு சிறிது கொத்தமல்லி மற்றும் 3 டேபிள் ஸ்பூன் பச்சரிசி மா சேர்த்து பிசைந்து அடை மா பதத்திற்கு வந்தவுடன் தோசைக்கல்லில் போட்டு வேக விட்டு எடுத்தால் ஆரோக்கியமான அடை தயார்! அடை மேல் நல்லெண்ணெய் கொஞ்சமாக ஊற்றி சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.