அனுமதிப்பத்திரம் இல்லாத “பொரதொளகாய் சொட் கண்” வகையைச் சேர்ந்த துப்பாக்கி மற்றும் T56 வகையைச் சேர்ந்த துப்பாக்கியின் 10 ரவைகளுடன் ஓய்வு பெற்ற சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர் ஒருவர் சம்மாந்துறை பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மலையடிக்கிராமம் 04 பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஓய்வு பெற்ற சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த கைது நடவடிக்கையானது அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஜி.டி.எஸ். அமரசிங்கவின் பணிப்புரைக்கமைய கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் அறிவுறுத்தலுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் வழிகாட்டுதலில் சம்மாந்துறை பொலிஸ் நிலையகுற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸ் சார்ஜன் டபிள்யூ.ஏ. சரத், பொலிஸ் உத்தியோகத்தர் எ.ம்.நிரஞ்சன், ஜிஹான், பெண் பொலிஸ் உத்தியோகத்தர் நிலந்தி, பொலிஸ் வாகன சாரதி அத்தனாயக்க, சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர் சரத் உள்ளிட்ட அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.