அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ள சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்பான அறிக்கை ஒன்று பதில் பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையை புலனாய்வு பிரிவுக்கும் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ள அதிகாரிகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காக, சம்பந்தப்பட்ட அறிக்கையை பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் சமர்ப்பித்ததாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
களுத்துறை, காலி, பூஸ்ஸ மற்றும் மாத்தறை சிறைச்சாலைகளில் பணியாற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உயிருக்கு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளதாகவும், இது தொடர்பாக பரிசீலித்து சம்பந்தப்பட்ட அறிக்கை வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனினும், அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்மீமன தலகஹ பிரதேசத்தில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக இதுவரை துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக சிறைச்சாலை அதிகாரிகள் பல்வேறு உயிர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய சிறைக்கைதிகளை காவலில் வைத்திருக்கும் அதிகாரிகளுக்கு உயிருக்கு அச்சுறுத்தல்கள் உயர் மட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.