வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் திரையரங்குகளில் மதுபான விற்பனை!

வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் திரையரங்குகளில் மது விற்பனை செய்ய அனுமதி வழங்குமாறு திரையரங்கு உரிமையாளர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஓடிடி தளங்களின் வருகையால் திரையரங்குகளின் வருமானம் வெகுவாகக் குறைவடைந்துள்ளதோடு மூடப்படும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.

இந் நிலையில் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் பெங்களூரு மற்றும் கூர்கானில் உள்ள பிவிஆர் ஐநாக்ஸ் திரையரங்குகளில் மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்குமாறு திரையரங்கு உரிமையாளர்களினால் கோரிகை முன்வைக்கப்பட்டுள்ளது.

வருமானத்தை அதிகரிக்கும் நோக்கிலும், ரசிகர்களுக்கு ப்ரீமியர் அனுபவத்தை கொடுக்கவும் இதுபோன்ற திட்டங்களை அறிமுகம் செய்ய தாம் தீர்மானித்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த கோரிக்கையானதுபொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை காலமும் மது அருந்தியவர்கள் திரையரங்குகளுக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இத் திட்டம் செயற்படுத்தப்பட்டால் திரையரங்குகள் மதுக் கூடங்களாக மாறிவிடும் எனவும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடமாக திரையரங்குகள் மாறிவிடும் என்றும் சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இதேவேளை குறித்த கோரிக்கைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என எதிர்ப்பு குரல்களும் தற்போது எழுந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.