நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு குழம்பு!

பூண்டில் அதிகளிவில் காணப்படும் ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.

இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தருவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

தினசரி உணவில் பூண்டு சேர்த்துக்கொள்வதால் பல வகையான புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவடைகின்றது.

பூண்டில் அல்லில் சல்பைடு என்ற பொருள் இருப்பதால் புற்றுநோய் எதிர்ப்பியாக செயற்படுவதுடன், இதய அடைப்பை நீக்கி இதய ஆரோக்கியத்தையும் பாதுகாக்கின்றது.

நீரிழிவு நோயாளிகள் தினசரி உணவில் பூண்டு சேரத்துக்கொள்வது சர்க்கரை அளவைக் சீராக வைத்துக்கொள்ள உதவும்.

உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு பூண்டு ஒரு வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும். இவ்வளவு மருத்துவ குணம் நிறைந்த பூண்டில் எவ்வாறு அசத்தல் சுவையில் குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பூண்டு – 30 பல்

சின்ன வெங்காயம் – 20

தக்காளி – 1

தனியாத்தூள் – 2 தே.கரண்டி

குழம்பு மிளகாய்த்தூள் – 2 தே.கரண்டி

மஞ்சள்தூள் – 1/2 தே.கரண்டி

புளி – நெல்லிக்காய் அளவு

நல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டி

தாளிக்க தேவையான பொருட்கள்

கடுகு – 1 தே.கரண்டி

சோம்பு – 1 தே.கரண்டி

வெந்தயம் – 1 /2 தே.கரண்டி

கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை
முதலில் புளியை நன்றாக 15 நிமிடங்கள் வரையில் ஊறவிட்டு வடிகட்டி ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்து வைத்தக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அந்த புளி தண்ணீரில் மல்லித்தூள், குழம்புதூள், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அதனுடன் வெங்காயம், பூண்டையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி 5 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவிட்டு, எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கினால் அவ்வளவு தான் நாவூரும் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த பூண்டு குழம்பு தயார்.