அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தனது குடும்பத்தினருடன் 4 நாட்கள் பயணமாக இந்தியா சென்றுள்ளார்.
அவரது மனைவியும் இந்திய வம்சாவளி பெண்ணுமான உஷா, குழந்தைகள் எவான், விவேக், மிராபெல் ஆகியோரும் இந்தியா சென்றுள்ளனர்.
டெல்லி விமான நிலையத்துக்குச் சென்ற ஜே.டி.வான்ஸ் மற்றும் குடும்பத்தினரை விமான நிலையம் சென்று இந்திய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் வரவேற்றுள்ளார்.
இதையடுத்து, டெல்லியில் உள்ள சுவாமி நாராயணன் அக்ஷர்தாம் கோவிலுக்கு ஜே.டி.வான்ஸ் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்யவுள்ளார்.
அதன்பின்னர், இன்று திங்கட்கிழமை (21) மாலை ஜே.டி. வான்ஸ், இந்திய பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு வர்த்தகம், வரிவிதிப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் ஆலோசிக்கப்பட உள்ளன. அதன்பின்னர், ஜே.டி.வான்ஸ் குடும்பத்தினருக்கு இந்திய பிரதமர் மோடி இரவு விருந்து அளிக்கவுள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இறக்குமதி வரியை கடுமையாக அதிகரித்துள்ளார். தற்போது அந்த வரிவிதிப்பு 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதியின் இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்குப்பின் ஜே.டி.வான்ஸ் குடும்பத்துடன் ஜெய்ப்பூர் செல்லவுள்ளார்.
நாளை அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவுள்ளார்.
பின்னர், நாளை மறுதினம் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு செல்லவுள்ளார். பின்னர், மீண்டும் ஜெய்ப்பூர் செல்லும் ஜே.டி.வான்ஸ் மற்றும் குடும்பத்தினர் அங்கிருந்து 24ம் திகதி அமெரிக்கா புறப்பட உள்ளனர்.