யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர் யாழ்.மக்கள் மிக அமைதியாக இருந்தமைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ். மக்கள் மிக நிதானமாக நடந்து கொண்டதாகவும்இ இதேபோன்ற சம்பவம் தெற்கில் நடைபெற்றிருந்தால் நிலைமை மிக மோசமாகியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
கீரிமலை பகுதியில் வலி.வடக்கில் வீடற்ற மக்களுக்காக அமைக்கப்பட்ட 100 வீடுகளை கொண்ட வீட்டுத்திட்டம் இன்றைய தினம் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என நான் உடனடியாகவே பொலிஸ்மா அதிபரையும், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளையும் கேட்டிருந்தேன்.
அதன் பின்னர் உடனடியாகவே விசேட விசாரணைக் குழு ஒன்றை உருவாக்கி யாழ்ப்பாணம் அனுப்பி அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டார்கள்.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் எதிர்காலத்திலும் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்படும் என நம்புகிறேன்.
இதேபோல் பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்டதன் பின்னர் இங்கே சில ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெற்றுள்ளது.
அவை புதுமையான விடயங்கள் அல்ல. பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் சக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டதன் பின்னர் என்ன மனோ நிலையில் இருந்திருப்பார்கள்.
அவர்களுடைய மனோநிலை என்ன? என்பதை நாங்கள் நன்றாகவே உணர்ந்து கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் மாணவர்களுடைய போராட்டங்கள்இ ஆர்ப்பாட்டங்கள் நியாயமானவை என்பதை ஒத்துக்கொள்கிறேன்.
அதேபோல் இவ்வாறான சம்பவம் ஒன்று தெற்கில் நடைபெற்றிருந்தால் அதன் பின்னான நிலைமை மிக மோசமாகியிருக்கும். ஆனால் யாழ்.மக்கள் மிக பொறுமையாக நடந்து கொண்டார்கள்.
அதற்காக அவர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். இதேபோல் இவ்வாறான விடயங்களில் ஊடகங்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளது. ஊடகங்க ள் சரியான முறையில் நடந்து கொள்ளவேண்டும்.
மக்கள் மத்தயில் அமைதியை உருவாக்குவதையே ஊடகங்கள் தங்கள் கடமையாக கொண்டிருக்க வேண்டும்.
மாறாக மக்கள் மத்தியில் அமைதியின்மையை உருவாக்குவதாக இருக்க கூடாது. ஊடகங்கள் தங்கள் கடமையை சரியாக செய்ய வேண்டும் என ஜனாதிபதி கேட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்காக இராணுவத்தினால் அமைக்கப்பட்ட வீ்டுகள் கையளிக்கும் நிகழ்வு இன்று நண்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனஇ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சிறுவர் மற்றும் மகளிர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.