ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் பிரதமை திதியில் இருந்து சஷ்டி வரையிலான ஆறு நாட்கள் ‘சஷ்டி விரதம்’ அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த ஆறு நாட்களும் முருகப்பெருமானை நினைத்து வழிபட சிறந்ததாகும். இந்த ஆறு நாட்களில்தான் சூரபதுமன், சிங்கமுகன், தாரகன் ஆகியோருடன் போரிட்டு, முருகப் பெருமான் தேவர்களை காத்தருளினார்.
சிவபெருமானை வேண்டி கடும் தவம் இருந்த சூரபதுமன், சிங்கமுகன், தாரகன் ஆகியோர் பல்வேறு வரங்களைப் பெற்றனர். அந்த வரம் அவர்களுக்கு ஆணவத்தையும் கொடுத்தது. அசுரர்கள் மூவரும் தேவர்கள் அனைவரையும் துன்புறுத்தத் தொடங்கினர். இதையடுத்து தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று, தங்களைக் காத்தருளும்படி வேண்டினர். சிவபெருமானும் தன்னுடைய நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை தோற்றுவித்தார். அந்த 6 தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று பொய்கையில் சேர்த்தார்.
அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக உருமாறின. அந்த அறுவரையும் கார்த்திகை பெண்கள் வளர்த்து வந்தனர். சூரபதுமனை வதம் செய்யும் காலம் நெருங்கிய வேளையில், பார்வதி தேவி, ஆறு பேரையும் ஒரே உருவாக மாற்றினார். இதனால் முருகப்பெருமானுக்கு ‘கந்தன்’ என்ற பெயர் ஏற்பட்டது. கந்தன் என்னும் சொல்லுக்கு ‘ஒன்று திரட்டப்பட்ட’ என்பது பொருளாகும். ஆறு குழந்தைகளும் ஒரே குழந்தையாக மாறியதால், முருகப்பெருமானுக்கு இப்பெயர் வந்தது.
பார்வதிதேவி, முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கி சூரனை வதம் செய்ய அனுப்பிவைத்தார். முருகப்பெருமான் தன்னுடைய படைகளுடன், அசுரப்படைகளை எதிர்த்துப் போரிட்டார். ஆறுநாட்கள் நடந்த போரில், இறுதிநாளான சஷ்டி அன்று சூரபதுமனை வேல் கொண்டு, இரண்டு கூறுகளாக பிளந்தார் ஆறுமுகன். அந்த இரு பகுதிகளில் ஒன்றை மயிலாக மாற்றி தனது வாகனமாகவும், மறு பகுதியை சேவல் கொடியாகவும் ஆக்கிக்கொண்டார்.
இந்தக் கதை தனக்குள் ஒரு தத்துவத்தைக் கொண்டுள்ளது. இறைவனை உணரவிடாமல், ஒவ்வொருவரிடமும் மாயை, கன்மம், ஆணவம் ஆகியவை ஆட்டிப் படைக்கின்றன. அவை ஒடுங்கினால்தான் இறைவனை உணர முடியும். அவையே சிங்கன், தாரகன், சூரபதுமன். இந்த மூன்றையும் நீக்கிய ஆத்மாவை, இறைவன் தன்னோடு இணைத்துக் கொள்கிறான் என்பதையே இந்தக் கதை உணர்த்துகிறது.
பகைமையை வெல்வது அல்ல சஷ்டி விரதம். பகைமையை மாற்றி, ஞானம் பெறச் செய்வதே சஷ்டி விரதத்தின் சிறப்பு. இது ஞானத்திற்கான திருவிழா. சூரபதுமனை அழிப்பது ஆணவத்தை அழிப்பதாக கருதப்படுகிறது. கந்த சஷ்டி விழா, முருகனின் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட சகல முருகன் ஆலயங்களிலும் நடைபெறும் முக்கிய விழாவாகும்.
விரதம் இருப்பது எப்படி?
பூஜை அறையை சுத்தம் செய்து, அறுங்கோணக் கோலம் வரைய வேண்டும். அந்த கோலத்தின் மீது குத்துவிளக்கை வைத்து, விளக்கேற்றி முருகப்பெருமானை பூஜிக்க வேண்டும். தவிர ஆலயங்களில் முருகப்பெருமானுக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளிலும் கலந்து கொள்ளலாம். இந்த விரதத்தை தங்களின் உடல் நிலைக்கு தக்கவாறு அனுஷ்டிக்கலாம்.
ஆறுநாட்களும் எந்தவித அன்ன ஆகாரம் இன்றியும், சிலர் பானம் மட்டும் அருந்தியும், பலர் முதல் ஐந்து நாட்கள் ஒரு நேரம் உணவு உண்டு, கடைசி நாளில் முழு உபவாசம் இருந்தும் விரதத்தை மேற்கொள்வார்கள். இறுதிநாள் முழுவதும் கண் விழித்து முருகப்பெருமானின் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். அடுத்த நாள் காலை முருகனுக்கு பூஜை செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்த விரதத்தை மேற்கொண்டால், குடும்பத்தில் நிலவும் துன்பங்கள் விலகும். வேலைவாய்ப்பு கிடைக்கும். கடன் தொல்லை நீங்கும். மேலும் இந்த விரதத்திற்கு முக்கிய சிறப்பு ஒன்று உண்டு. ‘சஷ்டியில் இருந்தால் அகப்பை (கரு)யில் வரும்’ என்பது பழமொழி. ஆம்.. சஷ்டி அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால், அவன் அருளால் குழந்தைப்பேறு உண்டாகும். பெண்களுக்கு இந்த விரதம் மிகவும் சிறப்புக் குரிய விரதமாகும்.