இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது முழு நேர நடிகராகியிருக்கிற விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது ‘சைத்தான்’, ‘எமன்’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வெளிவந்த படங்கள் எல்லாம் ஹிட்டாகி வரும் நிலையில், இந்த படங்கள் மீதும் பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
இந்நிலையில், வருகிற நவம்பர் 3-ந் தேதி விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘சைத்தான்’ படத்தின் ஆடியோவை ரிலீஸ் செய்யவுள்ளனர். இந்த ஆடியோ வெளியீட்டின் போது, படத்தில் முதல் 5 நிமிட காட்சிகளை திரையிட்டு காண்பிக்க உள்ளாராம். சைக்காலஜிக்கல் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் 5 நிமிடங்கள் படத்தை பற்றிய ஒரு புரிதலை கொடுக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே, இதுபோல், ‘ராஜதந்திரம்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் முதல் 6 நிமிட காட்சிகள் வெளிவந்து, அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ‘சைத்தான்’ படத்தில் விஜய் ஆண்டனி சாப்ட்வேர் இன்ஜினியராக நடிக்கிறார். அருந்ததி நாயர், பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா, மீரா கிருஷ்ணன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை இயக்கியிருக்கிறார்.