ஒருமுறை இந்திர சபையில் ‘இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா?’ என்ற விவாதம் எழுந்தது. அங்கு கூடியிருந்த தேவர்களும், முனிவர்களும் இரண்டு பிரிவுகளாக பிரிந்து தங்களது கருத்துகளைச் சொல்லத் தொடங்கினர்.
‘இல்லறம் என்பது ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டு, குடும்ப உறவுகளுடன் சேர்ந்து வாழும் இயல்பு நிலையைக் கொண்டது. சிற்றின்பத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த வாழ்க்கையில், உயர்நிலையை அடைவது கடினமே’ என்பது துறவற அணியின் வாதம்.
‘இறைவனை அடைய வேண்டும் என்கிற சுயநல நோக்கத்துடன், எதிலும் விருப்பம் இல்லாமல், எவருக்கும் உதவாமல் தனித்து வாழ்பவர்கள்தான் துறவறம் புரிபவர்கள். இப்படிப்பட்டவர்கள் தான் உயர்நிலைக்குச் செல்வதும் கடினம்’ என்று குற்றம் சாட்டினர், இல்லற அணியினர்.
இப்படியே இரண்டு அணியினரும் தங்கள் தரப்பு நியாயத்தையும், எதிர்தரப்பு குறைகளையும் வலியுறுத்தி பல கருத்துகளைச் சொல்லிக் கொண்டிருந்தனர். வாக்குவாதம் நீண்டு கொண்டே போனது.
இந்த நிலையில் நடுநிலைவாதிகளாக இருந்த சிலர் தங்களின் கருத்துக்களைக் கூறினர். ‘இல்லற வாழ்க்கை என்பது இன்ப துன்பங்களுடையது. வாழும் காலத்தில் அவர்கள் செய்யும் நல்லவை, தீயவைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு பலன்கள் கிடைக்கின்றன. குறுகிய காலமே கொண்ட இந்த இல்லற வாழ்க்கையில் இருந்தும் சிலர் உயர்நிலையை அடைந்திருக்கின்றனர்.
துறவு வாழ்க்கை என்பது இன்ப துன்பங்களில்லாதது. இறைவனை நாடுவதும், காலங்கள் பல கடந்து, இறைவனை அடைவதுமே இதன் நோக்கம். இந்த வழியிலும் சிலர் உயர்ந்த நிலையை அடைந்திருக்கின்றனர்.
அதேபோல், தூய்மையோடு இல்லறத்தை நடத்தி வந்து, பின்னர் இல்லறம் துறந்து, துறவறம் சென்று இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து, இரு வழிகளிலும் இருந்து உயர்நிலையை அடைந்தவர்களும் உண்டு. எனவே இல்லறம், துறவறம் என்று கருத்து வேறுபாடு கொள்ளாமல், தாங்கள் எடுத்துக் கொண்ட அறத்தின் வழியில் சிறப்பாகச் செயல்படுபவர்கள் மட்டுமே உயர்ந்த நிலையை அடைகின்றனர் என்பதை நாம் அனைவருமே உணர வேண்டும்’ என்றனர் நடுநிலைவாதிகள்.
இதைக் கேட்ட இந்திரன், ‘நீங்கள் சொன்ன மூன்று வழிகளிலும் பலர் உயர்நிலையை அடைந்திருக்கின்றனர் என்பது உண்மைதான். ஆனால் நாம் இங்கு இல்லறம், துறவறம் என்பதில் எது சிறந்தது என்றுதான் பேசிக் கொண்டிருக்கிறோம். குறுகிய காலமே கொண்ட இல்லற வாழ்க்கையில் பல்வேறு இன்ப, துன்பங்களைப் பெற்று, அதிலிருந்து உயர்ந்த நிலையை அடைவதென்பது மிகவும் கடினமானது. ஆகவே இல்லறத்தின் வழியில் உயர்நிலையை அடைவதையே சிறப்புக்குரியதாக நான் கருதுகிறேன்’ என்று இல்லற வாழ்க்கைக்கு ஆதரவாகப் பேசினான்.
சாபம் :
அப்போது தேவகுருவான பிரகஸ்பதி, ‘இந்திரா! நீ சொல்வதை என்னால் ஏற்க முடியாது. இல்லற வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் அனைவரும் இன்பங்களையே நாடுகின்றனர். அவர்கள் தங்களுடைய இன்ப வாழ்க்கையில் ஏதாவது குறைவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மட்டும் சிறிது நேரம் இறைவனை நினைத்து வேண்டுகின்றனர். ஆனால், துறவற வாழ்க்கைக்குச் செல்பவர்கள், தங்களுடைய உறவுகள், ஆசைகள் என்று அனைத்தையும் துறந்து, முழுநேரமும் இறைவனை நினைத்து வேண்டி வழிபட்டு உயர்ந்த நிலைக்கு வருகின்றனர். எனவே துறவறமே சிறப்புடையது’ என்றார்.
தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு, தேவகுருவின் வார்த்தை கோபத்தை வரவழைத்தது. ‘தேவகுருவே! இல்லற வாழ்க்கை என்பது இன்பம் மட்டுமே கொண்டது என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். தங்களின் தவறான எண்ணத்தை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள்’ என்றான்.
‘மனிதர்கள் அனைவரும் நிலம், செல்வம், பெண் போன்ற சிற்றின்பங்களுக்கு ஆசைப்பட்டு அழிந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அந்தச் சிற்றின்பங்களில் இருந்து எதுவும் குறைந்து விடக்கூடாது என்றுதான் பலரும் இறைவனை வேண்டுகிறார்கள். அவர்களுக்கு இன்பமாக இருக்க வேண்டுமென்பதில் தான் விருப்பம் அதிகம். எதிர்காலத்தில் கிடைக்கும் பேரானந்தம் எனும் உயர்நிலையை அடைய வேண்டுமென்பதில் சிறிது கூட விருப்பமில்லை’ என்று வாதிட்டார் தேவகுரு.
தேவேந்திரனின் கோபம் எல்லை கடந்தது. ‘தேவகுருவே! இல்லற வாழ்க்கையில் கிடைக்கும் சில இன்பங்களைத் தவிர்த்துப் பசி, வறுமை, போட்டி, பொறாமை, பயம் என்று எத்தனையோ துன்பங்கள் அவர்களுக்கு வந்து சேர்கின்றன. அந்தத் துன்பங்களையெல்லாம் கடந்தும், துன்பங்களுக்கு மத்தியிலும்தான் அவர்கள் இறைவனை வேண்டி உயர்நிலையை அடைகிறார்கள். இந்த உண்மை தெரியாமல் பேசிய நீங்கள், பூலோகத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, பசி, வறுமை போன்ற துன்பங்களை அடைந்து மனித வாழ்க்கையின் உண்மையை உணர்வீர்களாக’ என்று சாபமிட்டு விட்டு அவையில் இருந்து வெளியேறினான்.
இந்திரனின் சாபத்தைக் கேட்டு பிரகஸ்பதி அதிர்ச்சியடைந்தார். அவையில் இருந்தவர்களும் எதுவும் பேசாமல் அமைதியானார்கள்.
விமோசனம் :
இந்திரனிடம் சாபம் பெற்ற பிரகஸ்பதி, பூலோகத்தில் பிறந்தார். அவருடைய குடும்பம் அதிகமான குழந்தைகளுடன் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்ததால், அவருக்குப் பல நாட்கள் உணவு கிடைக்காமல் போனது. அதனால் துன்பமடைந்த அவர், தனது பசியைத் தீர்க்கத் தேவையான உணவு கிடைத்தால் போதுமென்று இறைவனை வேண்டிக் கொண்டிருந்தார்.
அவருடைய வேண்டுதலை இறைவன் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை, அவருக்கு ஒவ்வொரு நாளும் ஒரு வேளை உணவு கிடைப்பதே மிகவும் கடினமாக இருந்தது. வறுமையில் இருந்து தனக்கு விடுதலை கிடைக்காதா? என்று ஒவ்வொரு நாளும் மனம் வருந்தியபடியே இருந்தார்.
இந்நிலையில் ஒருநாள், அவருக்குக் கிடைத்த சிறிது உணவைச் சாப்பிடுவதற்காக அமர்ந்தார். அப்போது அங்கு வந்த ஒரு நாய் அவரிடம் இருந்த உணவைப் பறித்துச் சாப்பிட முயன்றது. இதனால் பதற்றம் அடைந்த பிரகஸ்பதி, கிடைத்திருக்கும் சிறிது உணவையும் இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் அந்த நாயை விரட்டினார்.
அப்போது நாய் பேசியது. ‘சென்ற பிறவியில் மனிதனாக இருந்த நான், எனது வீட்டில் என் குழந்தைகளுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாய் உணவுக்காக என்னைத் தேடி வந்தது. நான் அந்த நாயை விரட்டியடித்ததால், இந்தப் பிறவியில் நாயாகப் பிறந்து துன்பம் அடைந்து கொண்டிருக்கிறேன். தேவ குருவாக இருந்த நீ, இந்திரனின் சாபத்தால் இப்போது வறுமையில் உழல்கிறாய். என்னையும் விரட்டி அடித்து அடுத்த பிறவியில் நாயாக பிறந்து துன்பம் அனுபவிக்கப் போகிறாயா?’ என்றது அந்த நாய்.
ஆனால் பசியின் பிடியில் இருந்த பிரகஸ்பதிக்கு அந்த பேச்சு எதுவும் பெரிதாகப்படவில்லை. அவர் நாயை விரட்டி விட்டு, உணவை சாப்பிட்டு முடித்தார். பசி அடங்கியதும் நாயின் எச்சரிக்கை மனதில் சஞ்சலத்தை வரவழைத்தது. தான் அடுத்த பிறவியில் நாயாகப் பிறந்து துன்பமடைவேனோ என்று அஞ்சத் தொடங்கினார்.
அந்த நினைவுகளுடனேயே, கால்போன போக்கில் நடந்து சென்றார். வழியில் ஒரு மரத்தடியில் பரத்வாஜர் என்னும் முனிவர் தியானத்தில் அமர்ந்திருந்தார். அவரிடம் சென்ற பிரகஸ்பதி, ‘எனக்கு இந்திரன் கொடுத்த சாபமே மிகவும் துன்பத்தைத் தருகிறது. இதில் ஒரு நாய் வேறு என்னை எச்சரித்துச் சென்றிருக்கிறது’ என்று தன் நிலையைக் கூறி, துன்பங்களில் இருந்து விடுபட ஒரு வழியைக் காட்டும்படி வேண்டினார்.
பரத்வாஜரோ, ‘ஒவ்வொரு வருடமும் சித்திரை பவுர்ணமி அன்று, திருக்கச்சி அத்திகிரி (காஞ்சீபுரம்) என்னுமிடத்தில் அமைந்திருக்கும் விஷ்ணு கோவிலுக்கு வந்து, பிரம்மன் வழிபாடு செய்வார். அவருடன் சேர்ந்து விஷ்ணுவை வழிபட்டால், உங்கள் சாபம் நீங்கும்’ என்று அருளினார்.
இதற்கிடையில் தேவகுருவான பிரகஸ்பதி இல்லாமல், இந்திர சபை தனது பொலிவை இழந்திருந்தது. மேலும், தேவலோகத்தில் வேள்வி செய்யத் தகுந்த குரு இல்லாததால், வேள்விகள் அனைத்தும் தடைப்பட்டு நின்றிருந்தன. இதனால் வருத்தமடைந்த தேவலோகத்தினர் இந்திரனிடம் சென்று தங்கள் கவலையைத் தெரிவித்தனர். இந்திரனும் இதற்கு ஏதாவது ஒரு வழி கிடைக்காதா என்று பிரம்மனைச் சந்தித்தான்.
பிரம்மதேவர் இந்திரனிடம், ‘நான் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பவுர்ணமி நாளில், பூலோகத்தில் இருக்கும் திருக்கச்சி அத்திகிரி சென்று விஷ்ணுவை வழிபட்டு வருகிறேன். நீயும் என்னுடன் வந்தால், நீ வேண்டியது கிடைக்கும்’ என்றார். இந்திரனும் அதற்குச் சம்மதித்தான்.
அடுத்து வந்த சித்திரை மாத பவுர்ணமியில், மனிதப் பிறவியில் இருந்த தேவகுரு திருக்கச்சி அத்திகிரி வந்து இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தார். அபோது அங்கு வந்த பிரம்மனும், இந்திரனும் கூட இறைவனிடம் பிரகஸ்பதிக்கு சாப-விமோசனம் தந்தருளும்படி வேண்டினர். மூவரின் வேண்டுதலிலும் மனம் மகிழ்ந்த விஷ்ணு, தேவகுருவான பிரகஸ்பதிக்கு மனிதப் பிறவியிலிருந்து விடுதலையளித்து அவரைத் தேவலோகத்துக்கு அனுப்பி வைத்தார்.
இல்லற வாழ்க்கை என்பது துன்பமுடையதுதான். அந்தத் துன்பத்திலும் இறைவனைத் தேடி உயர்நிலையை அடைந்திட முயற்சிக்க வேண்டும் என்பதையே பிரகஸ்பதி பெற்ற சாபமும், விமோசனமும் நமக்கு உணர்த்துகின்றன.