இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒடியல் கூழ் உடலுக்கு வலு சேர்க்கும் உணவாகும்.
இந்த ஒடியல் கூழை அசைவ உணவாகவும் சைவ உணவாகவும் தயாரிக்கலாம்.
ஒடியல் கூழை தயாரிக்க தேவையான பொருட்கள்
- ஒடியல் மாவு – ஒரு கப்
- பயிற்றங்காய் (காராமணி) 100 கிராம்
- மரவள்ளி கிழங்கு 100 கிராம்
- பலா (கொட்டை) விதை – 100 கிராம்
- காய்ந்த மிளாகாய் – 20
- மிளகு ஒரு தேனீர் கரண்டி அளவு
- மஞ்சள் ஒரு துண்டு
- பெரிய வெள்ளைபூண்டு 5 பற்கள்
- புளி போதுமான அளவு
- புழுங்கல் அரிசி ஒரு பிடி
- சிறிதாக வெட்டப்பட்ட தேங்காய் அரை கப்
- முருங்கை இலை 10 நெட்டு
- உப்பு போதுமான அளவு
சைவ கூழ் தயாரிக்க தேவையான பொருட்கள்
- கத்தரிக்காய் 100 கிராம்
- கடலை 100 கிராம்
- பெரிய வாழைக்காய் ஒன்று
- அசைவ கூழ் தயாரிக்க
- இறால் அல்லது நெத்தலி மீன் 500 கிராம்
- இரண்டு நண்டு
- பாரை மீன் தலை ஒன்று
- சிறிய கருவாடு 50 கிராம்
செய்முறை
காய்ந்த மிளகாய், மிளவு, வெள்ளை பூண்டு, மஞ்சள் ஆகியவற்றை நன்கு மிருவதாக அரைத்து கொள்ள வேண்டும்.
மீன், கருவாடு ஆகியவற்றை கழுவி துப்பரவு செய்து வைத்து கொள்ள வேண்டும்.
மரவள்ளி கிழங்கு, பயிற்றங்காய், பலா விதை ஆகியவற்றை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி கழுவி வைக்க வேண்டும்.
பாத்திரத்தில் புளியை இட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு நன்றாக கரைத்து கொள்ள வேண்டும்.
ஒடியல் மாவை பாத்திரத்தில் இட்டு அளவுக்கு தண்ணீர் சேர்த்து கூழ் பதத்திற்கு கரைத்து 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
பின்னர் ஒரு துணியில் இட்டு பிழிந்து மற்றுமொரு பாத்திரத்தில் போட்டு அரைத்தை கூட்டை சேர்த், ஒரு கப் புளி கரைசலை இட்டு அளவாக தண்ணீர் கரைக்க வேண்டும்.
பின்னர் ஒரு கப் அளவான அரிசி வேக கூடிய பானையில் அரைவாசி தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
கொதித்த பின்னர், கழுவி வைத்துள்ள காய்கறி, முருங்கை இலை, கழுவிய அரிசி ஆகியவற்றை போட்டு அவிய விட வேண்டும்.
இவை முக்கால் பதமாக அவிந்த பின்னர், மீன்,நண்டு, கருவாடு ஆகியவற்றை போட்டு நன்றாக அவிய விட வேண்டும்.
காய்கறி நன்றாக அவிந்த பின்னர், ஒடியல் மா கரைசலை ஊற்றி நன்றாக அகப்பையால் கலக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்து, வெட்டி வைத்த தேங்காய் கலந்து இறக்கி அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.
ஒடியல் கூல் சூடாக இருக்கும்போது குடித்தால் நன்றாக இருக்கும்.
ஒடியல் கூழை சைவமாக தயாரிக்க வேண்டுமாயின் மீன், நண்டு, கருவாடு ஆகியவற்றை தவிர்த்து விட்டு, கடலை, கத்தரிக்காய், வெட்டிய வாழைக்காய், ஏனைய காய்கறிகளுடன் சேர்த்து அவித்து ஒடியல் கூல் செய்ய வேண்டும்.