நடிகர் கமல்ஹாசன் உடன் 13 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த நடிகை கௌதமி, இப்போது மிகுந்த மனவருத்தத்துடன் அவரை பிரிவதாக அறிவித்துள்ளார்.
கமலுடன் உறவை துண்டிப்பது இதயம் நொறுங்குவது போன்று உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
குருசிஸ்யன் திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கௌதமி.
ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பலருடன் சினிமாவில் ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
கமலும், கௌதமியும் முதன்முறையாக அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன்பின்னர் தேவர் மகன், குருதிப்புனல், பாபநாசம் போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
கௌதமி முதல் , சந்தீப் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.
இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற மகள் உள்ளார்.
கௌதமி-சந்தீப் இடையேயான திருமண உறவு நீடிக்கவில்லை, இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் உடனான கொண்ட நட்பில் அவருடன் வாழ தொடங்கினார்.
கமலும் நடிகை சரிகாவை பிரிந்த பின்னர் கௌதமியுடன் வாழ தொடங்கினார்.
கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கமலும், கௌதமியும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
தற்போது கமலின் திரைப்படங்களில் உடை வடிவமைப்பாளராகவும், பாபநாசம் திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவருடன் ஜோடியாகவும் நடித்தார்.
இந்நிலையில், கமல் உடன் வாழ்ந்து வந்த உறவை முறித்து கொள்வதாக நடிகை கௌதமி தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
இதுப்பற்றி கௌதமி கூறியிருப்பதாவது,
‘மிகுந்த மனவருத்தத்தில் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
கமலுடன் வாழ்ந்து வந்த வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
தனிப்பட்ட சில காரணங்களால் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகவே இதுப்பற்றி யோசித்து வந்தேன்.
முக்கியமாக என் மகளின் எதிர்காலம் கருதியே இந்த முடிவை எடுத்துள்ளேன்.
கமலுடன் உறவை துண்டிப்பது இதயம் நொறுங்குவது போன்று உள்ளது.
நான் யாரையும் குறை சொல்லவோ, அனுதாபம் தேடுவதோ என் நோக்கம் அல்ல.
29ஆண்டுகாலம் கமல் உடனான நட்பில் நிறைய கற்று கொண்டேன்.
இக்கட்டான நேரங்களில் எனக்கு உறுதுணையாக இருந்தவர் கமல்.
13 ஆண்டுகாலம் சேர்ந்து வாழ்ந்து இப்போது பிரிந்தாலும், கமலின் ரசிகையாக என்றும் தொடர்வேன்.
கமலின் திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியபோது அவரிடமிருந்து நிறைய விடயங்கள் கற்று கொண்டேன்.
இதுவரை அவர் செய்துள்ள சாதனைகள் ஏராளம், இன்னும் அவர் பல சாதனைகள் புரிவார், அவருக்கு வாழ்த்து சொல்ல நான் காத்திருக்கிறேன்.
ரசிகர்களாகிய நீங்கள், என் வாழ்க்கை பயணத்தில் ஒரு அங்கமாய் இருந்துள்ளீர்கள்.
உங்கள் மத்தியில் என்னால் இயன்றவரை எல்லா நேரங்களிலும் எனது வாழ்க்கையை கண்ணியத்துடன் வாழ்ந்தவள் என்பதால் இந்த தருணத்தில் என் வாழ்வில் நடப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
கடந்த 29ஆண்டுகளாக உங்களிடமிருந்து ஏராளமான அன்பையும், ஆதரவையும் பெற்றுள்ளேன்.
என் வாழ்க்கையின் இருள்சூழ்ந்த, வலியான காலங்களில் என்னை வழிநடத்தியதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.
மேற்காட்டியவாறு நடிகை கௌதமி டுவிட்டரில் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன், நடிகை வாணி கணபதியை 1978ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.
இந்த திருமணம் 10ஆண்டுகள் தான் நீடித்தது.
1988-ல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அதன்பின்னர் கமல் பொலிவூட் நடிகை சரிகாவை திருமணம் செய்தார்.
இவர்களுக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷ்ராஹாசன் என்ற இரு மகள்கள் உள்ளனர்.
சரிகா உடனான திருமண வாழ்வு 16 ஆண்டுகள் நீடித்தது, 2004ல் விவாகரத்து பெற்று கமலும், சரிகாவும் பிரிந்தனர்.
அதன்பின் நடிகை கௌதமியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.
இப்போது அதுவும் முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.