தமிழகத்தில் உள்ள சாமி சிலைகளில் இருந்து அவ்வப்போது தண்ணீர், பால் ஆகியவை கசிந்து வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது வாணியம்பாடி கோயிலில் நாகதேவதை சிலையிலிருந்து திடீரென தண்ணீர் கசிந்து வருவதால், கடவுள் அருள் என பக்தர்கள் போற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் பழமை வாய்ந்த ஓம்சக்தி அம்மன் கோயில் உள்ளது. அங்கு நாகதேவதை சிலை உள்ளது. நாகதேவதை சிலை முன் செவ்வாய், வெள்ளி மற்றும் முக்கிய விஷேச நாட்களில் பெண்கள் எலுமிச்சை பழத்தில் விளக்கு ஏற்றுவது வழக்கம். நேற்று அதே போல் ஒரு பெண் விளக்கு ஏற்ற சென்ற பொழுது, நாகதேவதை சிலையிலிருந்து தண்ணீர் கசிவதை கண்டு வியந்தார்.
இந்த தகவலை கோயில் நிர்வாகிகளிடம் தெரிவித்தார். உடனே பூசாரி அங்கு வந்து அந்த தண்ணீரை துடைத்து விட்டு பார்த்தார். ஆனால் மீண்டும் தண்ணீர் கசிந்து கொண்டே இருந்தது. அதை பார்த்து எல்லாம் அந்த அம்மனின் செயல் என பகதர்கள் கூறிக்கொண்டிருந்த பொழுது, பக்தர்களில் ஒருவருக்கு சாமி வந்தது, அவர், ‘நான் தான் நாக்தேவதை, இங்கு தண்ணீராக உருமாறி வந்துள்ளேன்’ என கூறியுள்ளார். இதையடுத்து அங்கு பக்தர்கள் கூட்டம் குவிந்தது. அம்மன் சிலையிலிருந்து கசிந்த தண்ணீரை பிடித்து, சிறப்பு வழிபாடு செய்தனர்.