உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நேற்று 41-வது நாளாக, முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று காலை 10.05 மணிக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்தார். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அவர், மதியம் 2.15 மணிக்கு வெளியே சென்றார். மீண்டும் மாலை 4.20 மணிக்கு உள்ளே சென்ற அவர், மாலை 6.15 மணிக்கு வெளியே புறப்பட்டு சென்றார்.
இதேபோல், சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் நிபுணர்களான சீமா, ஜூடி ஆகியோரும் காலை முதலே அவ்வப்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி மூலம் உடற்பயிற்சி மேற்கொள்ள செய்தனர். தற்போது, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், அடுத்த ஒரு வாரத்தில் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக நேற்று அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு நடிகை நமீதா, தமிழகத்தை சேர்ந்த இந்திய கபடி அணி வீரர் தர்மராஜ் சேரலாதன் உள்பட பலர் வந்து சென்றனர்.
ஆஸ்பத்திரிக்கு வெளியே அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் பொன்னையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் பெற்று வருகிறார். லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, மற்ற மருத்துவ நிபுணர்கள் குழுவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அற்புதமான மருத்துவ சிகிச்சையை அளித்து கண்காணித்து வருகின்றனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதா தற்போது பேசுகிறார். அவருக்கு பிசியோதெரபி சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும், மிகவும் பாராட்டத்தக்க அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை கூறியுள்ளது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிசியோதெரபி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் உடற்பயிற்சியிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உடற்பயிற்சி முடிந்ததும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சகஜநிலைக்கு வந்து அரசியல் பிரச்சினையிலும், ஆட்சி பிரச்சினைகளிலும் முழுநேரம் பங்கேற்க வருவார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா நன்கு உடல்நலம் தேறிவருவதற்கு மக்கள் ஆண்டவனை தொழும் ஈடுபாடு, அவர்கள் செய்யும் பூஜை, அவர்கள் தரும் ஆசிர்வாதமும் தான் முக்கிய காரணம். அவர்கள் எல்லோருக்கும் அ.தி.மு.க. சார்பில் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகை நமீதா நிருபர்களிடம் கூறும்போது, “முதல்-அமைச்சர் ஜெயலலிதா பீனிக்ஸ் பறவை மாதிரி திரும்பி வருவார்கள். அவர் தற்போது நலமுடன் இருக்கிறார். நல்ல வலிமையோடு மீண்டும் அவர் திரும்பி வந்து பொதுமக்களுக்கு நல்லது செய்வார்” என்றார்.