கடந்த 13 ஆண்டுகளாக தன் மகள் சுப்புலட்சுமியுடன் கமல் வீட்டில் ஒன்றாக வசித்துவந்தகெளதமி திடீரென கமலைவிட்டு பிரிவதாக இன்று அறிவித்தார். இந்த திடீர் முடிவு குறித்து நமக்காக கெளதமி அளித்த பிரத்யேக பேட்டி.
கடந்த இரண்டு வருடமாக மன உளைச்சலில் இருந்ததாக சொல்லி இருக்கிறீர்களே?
நான் பப்ளிக்கில் முகம் தெரிந்த ஒரு பெண்மணி. என் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. மனித வாழ்வில் மாற்றம் என்பது நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும்.அது தான் இயல்பு.அது என் வாழ்விலும் நடந்து கொண்டே வருகிறது. நான் 16 வயதிலேயே சுயமாக தனியாக சமூகத்தில் வாழ்வதற்கு என்னை தயார் செய்து கொண்டவள். இப்போது எனக்காகவும், என் மகளுக்காகவும் பிரிய வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. அதனால் பிரிகிறேன். கடந்த இரண்டு வருடமாக மன உளைச்சலில் இல்லை ஆனால் மாற்றம் பெறும் முயற்சியில் இருந்தேன்.
உங்கள் மகளின் எதிர்கால வாழ்வை பாதுகாக்க வேண்டிய சூழலில் இருப்பதாக சொல்லி இருக்கிறீர்களே?
நான் கஷ்டங்களை சகித்துக் கொண்டு வாழ்கிறேன் என்பதற்காக என் மகளும் அப்படியே வாழவேண்டும் என்கிற அவசியம் எதுவும் இல்லையே? அவள் விருப்பப்படி தனித்தன்மையோடு வாழ்க்கை அமைத்து கொள்ள வேண்டும் என்பது அவளது உரிமை. அதை அமைத்துக் கொடுக்க வேண்டியது அம்மாவாக என்னுடைய கடமை. நாங்கள் மட்டுமல்ல எங்கள் குடும்பத்தாரும் சில பாதிப்புகளை அனுபவித்தனர் அதனால் இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்.
கமல் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்ஷராவுக்கும் உங்களுக்கும் இடையே மனவருத்தம் உண்டானதால் பிரிந்தீர்களா?
நான் எப்போதும் அவர்களுக்கு எதிராக நின்றதே இல்லை. ஆதரவாக இருந்து இருக்கிறேன். பின்புலமாக இருந்துள்ளேன். எங்களுக்கு இடையில் வேறு எந்தவித மனஸ்தாபமும் இருந்ததே இல்லை.
மோடியை சந்தித்த பிறகு இந்த முடிவை எடுத்தது ஏன்?
நான் பிரிவது என்பது ஏற்கெனவே எடுத்துவிட்ட முடிவு. பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்திக்க தேதி கேட்டு இருந்தேன். அதற்கும் நான் இப்போது எடுத்துள்ள பிரிவு முடிவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.