அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 8–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் இருவரும் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் ஹிலாரியின் இ–மெயில் விவகாரம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருப்பது, தேர்தலில் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. முன்னதாக இரு வேட்பாளர்களுக்கு இடையே நடத்தப்பட்ட நேரடி விவாதம் மற்றும் அதைத்தொடர்ந்து நடந்த கருத்துக்கணிப்புகள் அனைத்திலும் ஹிலாரியின் கையே ஓங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே இருக்கும் நிலையில் ஹிலாரி கிளிண்டனின் செல்வாக்கு திடீரென சரிந்துள்ளது. இ-மெயில் விவகாரம் குறித்து மீண்டும் விசாரணை நடத்தப் போவதாக அமெரிக்காவின் எப்.பி.ஐ. உளவு நிறுவன இயக்குனர் ஜேம்ஸ் சமீபத்தில் அறிவித்தது ஹிலாரியின் செல்வாக்கு சரிய காரணமாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், ஏபிசி நிறுவனமும் வாஷிங்டன் போஸ்டும் இணைந்து அமெரிக்க தேர்தல் கருத்துக்கணிப்பு நடத்தியதில், ஹிலாரி கிளிண்டனை விட ஒரு புள்ளி டிரம்ப் அதிகமாக பெற்றுள்ளார். டிரம்ப் 46 சதவீதம் பேரும், ஹிலாரி கிளிண்டனுக்கு 45 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது வரை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் முதல் முறையாக ஹிலாரி பின் தங்கியுள்ளார்.