உடலை அழகாக வைத்துக் கொள்ள கடலை மாவு
அக்காலத்தில் பெண்கள் அனைவரும் அழகாக இருப்பதற்கு காரணம் என்னவென்று தெரியுமா? அவர்கள் கெமிக்கல் இல்லாத பொருட்களைக் கொண்டு, உடலைப் பராமரித்து வந்தது தான். அதிலும் அவர்கள் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு தான், உடலைப் பராமரித்து வந்தார்கள். அந்த பொருட்களாவன மஞ்சள் தூள், தயிர், பால், கடலை மாவு, பயித்தம் பருப்பு மாவு போன்ற பல. அதனால் தான் வீட்டில் உள்ள பாட்டிகள் குளிக்கும் போது மஞ்சள் தூள், கடலை மாவு போன்றவற்றை பயன்படுத்தி குளிக்குமாறு சொல்கிறார்கள்.
ஏனெனில் அவற்றில் பல அழகு நன்மைகள் நிறைந்துள்ளன. அதிலும் பஜ்ஜி சுடுவதற்கு பயன்படும் கடலை மாவானது ஒரு பாரம்பரிய இந்திய அழகுப் பொருள். இந்த பொருளைக் கொண்டு உடலைப் பராமரித்து வந்தால், பிம்பிள், சரும வறட்சி மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசை, சருமத்தில் இருக்கும் கருமைகள் மற்றும் பொலிவிழந்த கூந்தல் போன்ற பலவற்றை சரிசெய்ய முடியும்.
இப்போது உடலில் உள்ள பிரச்சனைகளைப் போக்க கடலை மாவை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
கடலை மாவை தயிர் அல்லது ரோஸ் வாட்டருடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவோடு மென்மையாக இருக்கும்.
சிலரது சருமத்தில் பிம்பிளானது அதிகம் இருக்கும். அத்தகைய பிம்பிளை போக்குவதற்கு பல பொருட்களைப் பயன்படுத்தி இருப்பார்கள். இருப்பினும் எந்த பலனும் கிடைத்திருக்காது. ஆனால் கடலை மாவில் சிறிது சந்தனப் பவுடர், மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், நல்ல பலன் கிடைக்கும். அதிலும் இந்த முறையை வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், நல்ல மாற்றம் தெரியும்.