யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு அவசியமான செயற்பாடுகள், துரித கதியில் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற குழுவினர் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்தனர். இதன்போது குறித்த குழுவின் தலைவர் ஜீன் லம்பேட் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
அத்தோடு, இலங்கையில் உருவாக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத தடைச்சட்டமானது, சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டு இருப்பதோடு, இலங்கையின் சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான ஈடுபாடுகளுடன் காணப்படுவது அவசியமென்றும், இது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் அவதானிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் பாராட்டை தெரிவித்த ஜீன் லம்பேர்ட், குறித்த அலுவலகத்தின் ஊடாக மக்கள் தமது கேள்விகளுக்கான பதிலை பெற்றுக் கொண்டால் மாத்திரமே அது உண்மையான ஒரு மாற்றத்தினையும் நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் விடயமாகவும் கருத முடியுமென மேலும் தெரிவித்தார்.
மேலும், புதிய அரசியலமைப்பானது சகல மக்களுக்கும் நன்மை பயப்பதாக அமையவேண்டும் என்றும், குறிப்பாக புதிய அரசியலமைப்பு தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் சிறந்த விடயமாக அமையுமென்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற குழுவின் தலைவர் ஜீன் லம்பேர்ட் இதன்போது தெரிவித்தார்.