அமெரிக்க ஜானாதிபதி தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில் அந்நாட்டின் 45-வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பார் என்று வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆய்வாளர்கள் குழு ஒன்று உறுதிபட கூறுகின்றது.
வாஷிங்டனில் வரலாற்று ஆசிரியராக இருந்து வருபவர் ஆல்லன் லிட்சுமன். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் காலங்களில் இவர் வெளியிட்டுள்ள கணிப்புகள் அனைத்தும் இதுவரை நிறைவேறியுள்ளன.
இந்த முறை இவர் தெரிவித்துள்ள கருத்துகள், இதுவரை அமெரிக்காவின் முக்கிய செய்தி ஊடகங்கள் எதுவும் வெளியிடாத வகையில் அமைந்துள்ளது. காரணம், இதுவரையான கருத்துக்கணிப்புகளில் டிரம்பை விடவும் ஹிலாரி கிளிண்டனே அதிக விழுக்காடு அதிகம் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
ஆனால் வரும் 8-ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மாபெரும் திருப்பம் ஏற்படும் எனவும், அதில் அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்பார் எனவும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவின் தேர்தல் மற்றும் அரசியல் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் ஆல்லன், 1860 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டுவரையான அனைத்து அமெரிக்க தேர்தல்களையும் ஆராய்ந்து ஒரு புது கோட்பாட்டினை வடிவமைத்துள்ளதாகவும், அதன்படியே இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவர் இதுவரை வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்புகள் அனைத்தும் துல்லியமாக அமைய தாம் உருவாக்கியுள்ள பதின்மூன்று அளவுகோல்களை பயன்படுத்துகின்றார்.
அதில் மக்களிடையே வேட்பாளர்களுக்கு இருக்கும் ஈர்ப்பு, வேட்பாளர்கள் குறித்த மக்களின் மதிப்பீடு அல்லது அவர்கள் மீது சமூகத்தில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவைகள் வெற்றி தோல்வியை முடிவு செய்யும்.
இதில் ஆறு அளவுகோல்கள் டிரம்புக்கு சாதகமாக இருப்பதாகவும் அதனாலையே இந்த முறை டிரம்ப் ஆட்சியை கைப்பற்றி அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொள்வார் என ஆல்லன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி கடந்த செப்டம்பர் மாதம் ஆல்லன் வெளியிட்ட கருத்துக்கணிப்புகளுக்கு பின்னரே ஹிலாரி குறித்து டிரம்ப் குறித்தும் புகார்களும் குற்றச்சாட்டுகளும் நாளுக்கு ஒன்று என வெளியாகி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனாலும் அரசியல் சூழல் டிர்ம்புக்கு சாதகமாகவே இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி இந்த தேர்தல் மிக நெருக்கமான முடிவுகளை கொண்டிருக்கும் என்றும், வெற்றி தோல்விகள் மிக அருகாமையில் இருக்கும் என்றும் ஆல்லன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1984 ஆம் ஆண்டு ரொனால்டு ரீகன் ஜனாதிபதியாக பொறுப்பேற்பார் என்பதை முதன் முதலில் வெளியிட்டவர் ஆல்லன் என்பது குறிப்பிடத்தக்கது