அமெரிக்காவின் சிறந்த அதிபராக நான் உருவாக காரணமாக இருந்த ஹிலாரி கிளிண்டன், அமெரிக்காவின் அதிபராகி ஐ.எஸ். தீவிரவாதிகளை ஹிலாரி ஒழித்துக் கட்டுவார் என ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். குடியரசு கட்சியின் சார்பில் பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான டொனால்ட் டிரம்ப் அவரை எதிர்த்து களம் காண்கிறார்.
இந்த தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக பதவி ஏற்பார் என்று இதுவரை நடைபெற்ற ஒன்பது அதிபர் தேர்தல்களின் முடிவுகளை சரியான முறையில் கணித்துக்கூறிய பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஹிலாரி கிளிண்டனை ஆதரித்து ஓஹியோ மாநிலத்தில் உள்ள ஆர்லந்தோ நகரில் நடைபெற்ற ஜனநாயக கட்சியின் பிரசார கூட்டத்தில் இன்று பேசிய அதிபர் பராக் ஒபாமா ஹிலாரியை வெகுவாக புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இந்த கூட்டத்தின்போது ஒபாமா பேசியதாவது:-
ஹிலாரியின் முயற்சிகள் உள்நாட்டில் பெரியளவில் பேசப்படாமல் போயிருக்கலாம். ஆனால், என்னை இந்த நாட்டின் சிறந்த அதிபராக உருவாக்கியதில் ஹிலாரியின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. அதற்கான உரிமையையோ, பெருமைக்கோ அவர் சொந்தம் கொண்டாடியதில்லை.
இந்த நாட்டின் சிறப்புக்குரிய, நிதானமாக அதிபராக முப்படைகளுக்கும் தலைமை தாங்கி, ஐ.எஸ். தீவிரவாதிகளை ஹிலாரி ஒழித்துக் கட்டுவார்.
அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஒசாமா பின்லேடனை வேட்டையாடிய அந்த மிகவும் சவாலான – சிக்கலான வேளையில், எனது முடிவுக்கு அவர் ஆதரவு தெரிவித்து, ஊக்கப்படுத்தினார். பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டபோது என்னுடன் அவர் ஆலோசனை அறையில் இருந்தார்.
அதுமட்டுமல்லாமல் நமது நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியாக ஓய்வின்றி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அமெரிக்காவின் மதிப்பை உயர்த்தியதுடன் மிகுந்த நன்மதிப்பையும் அவர் பெற்றுள்ளார்.
முந்தைய அனுபவங்களின் வாயிலாக அவர் இந்த உலகத்தை மிக நன்றாக புரிந்து வைத்துள்ளார். நாம் சந்திக்கும் சவால்களைப்பற்றி புரிந்து வைத்துள்ளார். தேர்தல் முடிவுகள் சாதகமாக அமைந்தால் நல்ல தேர்தல் என்றும் பாதகமாக அமைந்தால் நாற்றமடித்த தேர்தல் என்றும் அவர் கூறியதில்லை.
அவர் தவறுகள் செய்திருக்கிறாரா? ஆம், செய்ததுண்டு. நானும் செய்திருக்கிறேன். கடந்த 30 ஆண்டுகளாக பொதுவாழ்வில் ஈடுபட்ட யாரும் தவறுகளே செய்யவில்லை என்று கூறிவிட இயலாது.
ஆனால், ஹிலாரியை பொருத்தவரை நல்லவராகவும், கண்ணியமான நபராகவும், நாம் என்ன செய்கிறோம் என்பதை அறிந்து வைத்துள்ள நபராகவும் இருப்பதால் இந்த நாட்டின் தலைசிறந்த அதிபராக அவர் ஜொலிப்பார்.
இதுவரை நமது நாட்டுக்கு ஒரு பெண் அதிபர் அமையாமல் போனதற்கு ஒரு காரணம் உண்டு. ஒரு ஆண் என்ற முறையில் எனது மகள்கள் தாங்கள் விரும்பும் எதையும் சாதிக்க வேண்டும் என நான் விரும்புவதுபோல், எனக்கு நிகராக இல்லாவிட்டாலும் எனது மனைவியை என்னைவிட உயர்ந்தவராக நான் அறிந்து வைத்திருப்பதுபோல், ஹிலாரி கிளிண்டன் இந்த நாட்டின் அதிபராக வருவதற்கு தன்னை எதிர்த்து போட்டியிடும் மற்றொருநபரை (டொனால்ட் டிரம்ப்) பலவகையில் தகுதியானவர் என்பதை வாக்காளர்களாக நீங்களும் உணர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.