அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 2 கோடியே 80 லட்சம் பேர் முன்கூட்டியே வாக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் ஹிலாரி வெல்வார் என ‘மூடிஸ்’ கணித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வருகிற செவ்வாய்க்கிழமை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
அமெரிக்காவில் 18 வயதானவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அங்கு 21 கோடியே 89 லட்சத்து 59 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள். எனினும் 14 கோடியே 63 லட்சத்து 11 ஆயிரம் பேர் வாக்களிக்க பதிவு செய்துள்ளனர்.
அமெரிக்காவில் தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்குப்பதிவு நாள் வரை காத்திருக்க வேண்டும் என்ற தேவை இல்லை. தேர்தலுக்கு முன்பாகவே வாக்களிக்கும் சிறப்பு வசதி அங்கு செய்து தரப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலில் இதுவரை 2 கோடியே 80 லட்சம் பேர் முன்கூட்டியே ஓட்டு போட்டு விட்டனர் என்ற தகவல் வெளியானது. முக்கிய மாகாணமான புளோரிடாவில் மட்டுமே 40 லட்சம் பேர் ஓட்டு போட்டு விட்டனர்.
வரும் செவ்வாய்க்கிழமைக்குள் முக்கிய மாகாணங்களில் மொத்த வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் முதல் பாதிப்பேர் வரை தங்கள் ஓட்டை ஏற்கனவே செலுத்தி விடுவர் என தகவல்கள் கூறுகின்றன.
கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் 12 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்துள்ள நிலையில், இந்த தேர்தலில் இதுவரை 2 கோடியே 80 லட்சம் பேர் முன்கூட்டியே ஓட்டு போட்டிருப்பது, இந்த தேர்தலில் வாக்காளர்களிடையே முன்கூட்டியே ஓட்டு போடுவதில் ஆர்வம் அதிகரித்து இருப்பதை காட்டுகிறது.
சான்போர்டு நகரில் நடந்த கூட்டத்தில் பேசிய ஹிலாரி கிளிண்டன், ‘‘முன்கூட்டியே ஓட்டு போடுவது வசதியானது’’ என கூறினார். அவர் எப்போதும் முன்கூட்டியே ஓட்டு போடுவதற்கு ஆதரவு தெரிவித்து வருபவர் ஆவார்.
இவர் முன்கூட்டியே ஓட்டு போடுவதற்கு மக்களை தயார் செய்து அனுப்புவதற்கு என்று ஒரு மாபெரும் குழுவை வைத்துள்ளார்.
இதற்கிடையே ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற வர்த்தக, நிதி சேவை நிறுவனமான மூடிஸ் கார்ப்பரேஷனின் அங்கமான ‘மூடிஸ் அனாலிடிக்ஸ்’ கணித்துள்ளது.
இந்த தேர்தலில் எலெக்டோரல் கல்லூரி ஓட்டுகளைப் பொறுத்தமட்டில் ஹிலாரிக்கு 332 ஓட்டுகளும், டிரம்புக்கு 206 ஓட்டுகளும் கிடைக்கும் என இந்த அமைப்பு கணித்திருக்கிறது.
இதேபோன்ற ராயிட்டர்ஸ், இப்சோஸ் கருத்துக்கணிப்பும் ஹிலாரி குறைந்தபட்சம் 278 எலெக்டோரல் கல்லூரி ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெறுவார் என கணித்துள்ளது.