வயிற்றில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட 1.36 கிலோ போதை மருந்து: பொலிசில் சிக்கிய பரிதாபம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் 1.36 கிலோ போதை மருந்தை வயிற்றில் மறைத்து வைத்து கடத்த முயற்சி செய்த பாகிஸ்தான் இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமா என்ற பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக சிலர் போதைமருந்துகள் பயன்படுத்துவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன் காரணமாக குறித்த இடத்தில் பொலிசார் நடத்திய தீவிர வேட்டையில் பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞரின் அறையில் 1 கிலோ எடையுள்ள போதைமருந்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்திய போது அவர் தன்னுடைய வயிற்றில் போதை மருந்துகளை மறைத்து வைத்துள்ள சம்பவம் பொலிசாருக்கு தெரிய வந்துள்ளது.

அதன் பின்னர் பொலிசார் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் . அப்போது அவருக்கு அளித்த மருத்துவ சிகிச்சையின் மூலம் 5 போதை மருந்துகளை மட்டுமே மருத்துவர்கள் வெளியில் எடுத்துள்ளனர்.

இதனால் மீதம் எவ்வளவு உள்ளது என்பதைப் பார்ப்பதற்காக மருத்துவர்கள் வயிற்றுப்பகுதியை பரிசோதனை செய்து பார்த்ததில் அதிர்ச்சியடைந்துள்ளனர். காரணம் அவருடைய வயிற்றில் இன்னும் 98 போதைமருந்துகள் உள்ளதாக மருத்துவர்கள் பொலிசாருக்கு தெரிவித்துள்ளனர்.

அதன் மொத்த எடை 1.36kg என்றும் இதன் மதிப்பு Dh500,000 (இலங்கை மதிப்பு (20,15,86,13 கோடி) வரை இருக்கும் என கூறப்படுகிறது.

இது போன்று போதை மருந்துகளை வயிற்றுப்பகுதியில் மறைத்துவைத்து கடத்த முயற்சி செய்வது தவறு என்றும், இது ஒரு சில நேரங்களில் உயிரையும் பறித்துவிடும் என பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.