யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் சந்தேக நபரை விடுவிக்குமாறு உத்தரவிட்ட வழங்கியதாக கூறப்படும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு மே 13-ம் திகதி புங்குடுதீவு பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் இருந்து குறித்த பாடசாலை மாணவி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர் ஒருவரை விடுதலை செய்யுமாறு யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு குறித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஆலோசனை வழங்கியிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபரை பிரதேச மக்கள் பிடித்து, நையப்புடைத்து, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்ததோடு உப பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் உதவி சாஜன் ஆகியோரால் சந்தேக நபர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டிருந்ததாக விசாரணைகளில் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து பிரதேசவாசிகளால் குறித்த சந்தேக நபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்குமாறும், சந்தேக நபரை விடுதலை செய்யுமாறும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆத்திரமடைந்த பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, அந்த போராட்டத்தினிடையே நீதிமன்றத்திற்கும் கல்வீச்சு நடத்தப்பட்டிருந்தது.
எனினும் பொலிஸாரினால் விடுதலை செய்யப்பட்ட சந்தேக நபர் பின்னர் கொழும்பு – வெள்ளவத்தை பிரதேசத்திலிருந்து கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான விசாரணைகளை நடத்திவரும் இரகசிய பொலிஸார் விசாரணை அறிக்கையை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பாரப்படுத்தியிருப்பதாக சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.