நாம் அலுவலகம் மற்றும் வெளியிடங்களில் பேசுவது முதல் சமூக வலைதளங்களில் ஈடுபடுவது, இணையதளத்தை உபயோகிப்பது என அனைத்திற்கும் அடிப்படையான ஆங்கில அறிவை பெற்றிருத்தல் வேண்டும். ஆங்கிலம் கற்க ஏராளமான ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் உள்ளன. ஆயினும் பெண்களுக்கு குறிப்பிட்ட வயதிற்கு மேல் வகுப்புகளுக்கு சென்று ஆங்கிலம் பயில்வது என்பது சற்று சிரமமான விஷயம். அதற்கு மாற்றாக நாம் கையில் எந்நேரமும் வைத்திருக்கும் ஸ்மார்ட்போனை ஆங்கிலம் பயில பயன்படுத்தி கொள்ளலாம்.
இதற்கென பிரத்யேகமான ஆங்கிலம் கற்று தரும் ஆப்ஸ் வசதி உள்ளன. இந்த முறையில் ஆங்கிலம் கற்பது என்பதில் தமிழ் வழியே சுலபமான முறையில் நடந்து வருகிறது.
நாம் நமது விருப்பமான நேரத்தில் இந்த ஆங்கில மொழி கற்கும் ஆப்ஸ்களை இயக்கி ஒவ்வொரு படி நிலையில் ஆங்கில மொழியை கற்று பேசவும், எழுதவும் முடியும். ஆப்ஸ் வழியே எப்படி என தயங்க வேண்டாம். நாம் தொடு திரை வழியே ஒவ்வொரு நகர்வின் மூலம் பெரிய வாக்கிய முதல் சிறிய வார்த்தை பயிலுதல் மற்றும் அதன் அர்த்தங்க்ள அறிதல் என பல முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
ஆங்கில மொழியை கற்க உதவும் ஆப்ஸ்கள்
ஆங்கில மொழியை தமிழ் வழியேயும், ஆங்கிலத்தின் மூலமும் கற்க ஏராளமான ஆப்ஸ்கள் உள்ளன. நாம் அதிகம் பயன்படுத்தும் ஆன்ட்ராய்ட் மொபைல்களில் உள்ள ப்ளே ஸ்டோரில் இந்த ஆப்ஸ்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஸ்போக்கன் இங்கிலீஷ் 360 தமிழ், தமிழ் இங்கிலீஷ் டிக்ஷனரி, ஹலோ இங்கிலீஷ், ஹெள டூ ஸ்டீக் ரியல் இங்கிலீஷ், லேர்ன் இங்கிலீஷ் வித் இங்கிலீஷ் லீப் என்பது மாதிரியான பல ஆப்ஸ்களை பிளே ஸ்டோர் மூலமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். சில ஆப்ஸ்களை பற்றி அறிவோம்.
ஸ்போக்கன் இங்கிலீஷ் 360 தமிழ் :
ஆங்கிலத்தை இரண்டு நிலைகளில் இந்த ஆப் கற்று தருகிறது. ஆரம்ப நிலை மற்றும் மேம்பட்ட நிலை என்ற இரு நிலைகளில் இலக்கணத்துடன் தமிழ் மொழி வாயிலாகவே ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பெரிய பெரிய வாக்கியங்கள் பல நாம் பல சூழல்களில் பயன்படுத்த ஏதுவாய் உள்ளன. உதாரணமாக ஷாப்பிங், பயணம், அலுவலகம் என்றவாறு தனிப்பட்டவாறு பயன்படுத்த தகுந்த வாக்கியங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஆங்கில மொழியறிவு என்பது படித்து அறிவது மட்டுமல்ல சிறந்த உச்சரிப்பும் அவசியம். அதற்கு இது உதவிகரமாக உள்ளது. ஒவ்வொரு வார்த்தையும், வாக்கியமும் சிறந்த உச்சரிப்புடன் பேசி காட்டும். அதன் மூலம் நாம் ஆங்கிலம் தவறின்றி பேச முடியும்.
இந்திய பிராந்திய மொழிகளின் மூலம் ஆங்கிலம் தரும் ஹலோ இங்கிலீஷ் :
தமிழ் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பிற பிராந்திய மொழிகள் மற்றும் சில உலக மொழிகள் அனைத்தின் வாயிலாகவும் ஆங்கிலம் பயிலும் வாய்ப்பை ஹலோ இங்கிலீஷ் தருகிறது. நாம் எந்த மொழியிலிருந்து ஆங்கிலத்தை கற்க விரும்புகிறோம் என்பதை தேர்வு செய்து கற்க வேண்டும். நமது பெயரை பதிவு செய்து கற்கும்போது நாம் எவ்வளவு தூரம் கற்று கொள்கிறோம் என்பதையும், நமது மொழியறிவு வளர்ச்சியை கணக்கிட்டு கூறும் வசதியும் உள்ளது.
வித்தியாசமான கிராபிக்ஸ் வடிவமைப்பில் ஆங்கில மொழியை படிப்பது, கேட்பது, கவனிப்பது, பேசுவது என்றவாறு தமிழ் மொழி வழியே நாம் சுலபமாய் ஆங்கிலம் பயிலலாம்.
நவீன ஆன்-லைன் அகராதி :
இது தமிழ் – இங்கிலீஷ் டிக்ஷனரி என்ற ஆப்ஸ்-யை ஆன்-லைன் மூலம் தரவிறக்கம் செய்து கொண்டால் போதும். இணையதள வசதியின்றியும் அவ்வப்போது ஆங்கில புலமையை பெற்றுக் கொள்ளலாம்.
எந்த ஒரு ஆங்கில வார்த்தை மற்றும் வாக்கியத்திற்கு அர்த்தம் அறிய வேண்டியிருந்தாலும் உடனே தமிழில் வழங்கிவிடும். நாம் தமிழில் டைப் செய்து அதற்கு இணையான ஆங்கில சொற்களை இந்த ஆப்பில் பெறலாம். மேலும், விளக்கமான வீடியோ மூலமும் ஆங்கிலத்தை கற்றறியும் வசதி இந்த ஆப்பில் உள்ளது.
ஆங்கிலத்தை கற்க வகுப்புகளுக்கு செல்லாமல் நமது வசதிக்கேற்ற நேரத்தில் துல்லியமான விளக்கத்துடன் பயில ஆங்கில மொழியறிவு ‘ஆப்’கள் உதவி புரிகின்றன.