மண்பாண்டங்கள் தொடங்கி எவர்சில்வர், பித்தளை, அலுமினியம் என நாம் உணவு சமைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்கள் காலச்சூழலுக்கு ஏற்ப மாறிவிட்டன. இவற்றில் கால மாற்றம் மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் ஓர் அங்கமாக பிரஷர் குக்கரில்தான் பெரும்பாலானோரின் வீடுகளிலும் உணவு சமைக்கப்படுகிறது. இதனால் சமையலுக்கான நேரம் கணிசமாக குறைந்தாலும், பிரஷர் குக்கரில் சமைப்பது ஆபத்தானது என்ற எண்ணமும் அச்சமும் பலருக்கும் இருக்கிறது. இது குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார் ‘சென்னை டெஸ்ட்டிங் லேபரட்டரி’ நிறுவன இயக்குநர் அசோக்குமார்.
பிரஷர் குக்கர் மட்டுமில்லாமல் எந்த வகை பாத்திரமாக இருந்தாலும் அவற்றின் ஆயுட்காலம் முடிந்தவுடன் அவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. மீறினால்தான் ஆபத்து. குறிப்பாக பிரஷர் குக்கரில் எல்லா வகையான உணவுகளையும் நேரடியாக சமைப்பதைத் தவிர்த்து, குக்கரின் உள்ளே ஒரு எவர் சில்வர் பாத்திரத்தை வைத்து உணவு சமைப்பதே சிறந்தது. அத்துடன் பிரஷர் குக்கரின் கொள்ளளவுக்கு ஏற்ற உணவுப் பொருட்களை வைத்து, தேவையான அளவு விசில் விட்டு சமைப்பதால் எந்தப் பிரச்னையும் வராது. பிரஷர் குக்கரில் சமையல் செய்வதால் நேரம் கணிசமாக குறைவதுடன், சத்துக்களும் ஆவியாகிச் செல்லாமல் தடுக்கப்படும்.
“இத்தாலியின் ‘ஜேர்னல் ஆப் புட் சயின்ஸ்’ (journal of food science) நிறுவன ஆராய்ச்சிப்படி, வேக வைத்தல் (boiling) முறையில் உணவு தயாரிப்பதால் 40-75 சதவீதமும், வறுத்தெடுத்தல்(roasting) முறையில் 53-90 சதவீதமும், ஆவியில் (steaming) முறையில் 75-90 சதவீதமும், பிரஷர் குக்கரில் சமைப்பதால் 90-95 சதவிகித ஊட்டச்சத்துக்களும் நமக்கு கிடைப்பதாகக் கூறப்பட்டுள்ளது”. பிரஷர் குக்கரில் உணவு சமைப்பது நல்லதுதான். ஆனால் எந்த மெட்டலால் ஆன குக்கரில், எவ்வளவு காலம் சமைக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது பிரச்னையின் தன்மை.
அலுமினியம், காப்பர்(Copper), எஸ்.எஸ்.ஸ்டீல்(stainless steel), டைட்டானியம்(Titanium) எனப் பலதரப்பட்ட மெட்டல்களிலும் பிரஷர் குக்கர்கள் செய்யப்படுகின்றன. இவற்றில் அலுமினியம் பிரஷர் குக்கர்தான் விலை குறைவானது. குறிப்பாக எஸ்.எஸ்.ஸ்டீல், காப்பர் மற்றும் டைட்டானியம் மெட்டல்களினால் ஆன பிரஷர் குக்கர்களில் சமைக்கும்போது, உணவுகளில் கலக்கும் மெட்டல்களின் அளவு மிகக்குறைவுதான். இதனால் இத்தகைய மெட்டலால் ஆன பிரஷர் குக்கரில் சமைப்பதால் ஆபத்து இல்லை. அதேசமயம் அலுமினிய குக்கரில் உணவு சமைக்கும்போது ஒரு நாளைக்கு 1-2 மில்லி கிராம் அலுமினிய மெட்டல் உணவின் வாயிலாக நம் உடலில் கலக்க வாய்ப்புள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organisation) அறிக்கை ஒன்றில், நாம் உணவு சமைக்கும் பாத்திரங்களில் இருந்து ஒரு நாளுக்கு 50 மில்லி கிராம் அளவிலான மெட்டல் நம் உணவில் கலக்கலாம். இந்த அளவை மீறி மெட்டல் கலந்தால் மட்டுமே ஆபத்து என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அச்சப்படாமல் அவரவர் திறனுக்கு ஏற்ற பிரஷர் குக்கர்களில் உணவு சமைக்கலாம். அதேசமயம் பிரஷர் குக்கர் மற்றும் எந்த வகை பாத்திரமாக இருந்தாலும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அவற்றில் கீறல்கள் விழுந்திருந்தாலும் விழாவிட்டாலும் அவற்றில் உணவு சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். மாறாக கீறல் விழுந்த பாத்திரங்களில்உணவு சமைப்பதால் அதிகமான மெட்டல் உணவின் வாயிலாக நம் உடலில் கலக்கும் ஆபத்து இருக்கிறது.சரியான வழிமுறைகளில் பிரஷர் குக்கரைப் பயன்படுத்துவோம்.