239 பேருடன் மாயமான MH 370 மலேசிய விமானத்தை விமானி
திட்டமிட்டே கடலில் மூழ்கடித்திருக்கலாம் என விசாரணை குழு சந்தேகம் வெளியிட்டுள்ளது. MH 370 மலேசிய விமானம் கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 239 பேருடன் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு புறப்பட்டது.
இந்திய பெருங்கடல் பகுதியில் பறந்த போது கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் திடீரென மாயமானது. அந்த விமானத்தை தேடும் பணியில் மலேசியா, அவுஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டன. இதில் எந்த தகவலும் கிடைக்காததால் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் இறந்துவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது.
இதைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் புலனாய்வு அமைப்பு மாயமான விமானம் குறித்து விசாரணையை தொடங்கியது.
இந்த நிலையில் டான்சானியா நாட்டுக் கடற்பகுதியில் மாயமான விமானத்தின் இறக்கை உள்ளிட்ட உதிரி பாகங்கள் கடந்த ஜூன் மாதம் கண்டெடுக்கப்பட்டன.
இந்த உதிரிபாகங்களை ஆய்வு செய்த அவுஸ்திரேலிய விசாரணைக் குழு விமானம் செங்குத்தான நிலையில் கடலில் செலுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளது.
விமானியே MH 370ஐ கடலுக்குள் வீழ்த்தி விபத்துக்குள்ளாக்கி இருப்பதாக விசாரணை குழு சந்தேகம் எழுப்பியுள்ளது.
விசாரணைக்குழுவின் இந்த புதிய சந்தேகத்தால் மாயமான மலேசிய விமான விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.