பாகிஸ்தான் நாட்டில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்ட விபத்தில் 17 பேர் பலியாகியுள்ளதாக வும் 40 பேர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கராச்சி நகருக்கு அருகில் உள்ள லந்தி என்ற பகுதியில் தான் இப்பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது.
இன்று அதிகாலை நேரத்தில் இரண்டு பயணிகள் ரயில் திடீரென ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்துள்ளன.
கண் இமைக்கும் நேரத்தில் இரண்டு ரயில்களும் பயங்கரமாக மோதிக்கொண்டன.
இவ்விபத்தில் ஒரு ரயிலின் இரண்டு பெட்டிகள் கடும் சேதாரம் அடைந்ததால், அதில் பயணம் செய்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும், அடுத்தடுத்த பெட்டிகளில் பயணம் செய்த 40 பேருக்கு படுகாயம் ஏற்பட்டதால், அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரண்டு ரயில்களும் மிதமான வேகத்தில் சென்றதால் அதிக உயிரிழப்புகள் தவிர்ப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன.
விபத்து குறித்து பொலிசார் நடத்தி முதற்கட்ட விசாரணையில் ஒரு ரயிலுக்கு தவறான சிக்னல் வழங்கப்பட்டதால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும், இதனை மறுத்துள்ள ரயில்வே துறை அதிகாரி ஒருவர் விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என தகவல் அளித்துள்ளார்.