நியு ஜெர்சி, Newark, Ivy Hill பகுதியில் தற்போது வசித்துவரும் மிகலன் ஜீவானந்தா, நியூ ஜெர்சி கல்வித்திணைக்களத்தினால் 2016 சித்திரை மாதம் நடாத்தப்பட்ட ஆண்டு 8 மாணவர்களுக்காக NJASK, PARCC (New Jersey Assessment of Skills and Knowledge, PARCC) இறுதிப் பரீட்சைகளில் விஞ்ஞானம், கணித பாடங்களில் நூறு வீத மதிப்பெண்களை பெற்று நியூஜெர்சி மாகாணத்தில் அனைத்து மாணவர்கள் மத்தியிலும் முதல் நிலையில் இருப்பது ஒரு பெருமைக்குரிய விடயமாகும்.
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஈழத் தமிழர்கள் ஜீவானந்தா சீனித்தம்பி, இந்திராணி இணையரின் மகனான மிகலன் ஜீவானந்தா என்ற மாணவனே இந்த சாதனை படைத்துள்ளார்.
விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் உயர் மதிப்பெண்களை பெற்றதன் மூலம் நியூ ஜெர்சி மாகாணத்தில் அதி உயர் நிலையான ஐந்தாவது நிலையில் (Level 5) சித்தி அடைந்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்து திரு.மிகலன் ஜீவானந்தா அவர்கள் அமெரிக்க மாநிலமான நியூ ஜெர்சியில் உள்ள Mt. Vernon பாடசாலையில் இடைநிலைக் கல்வியை முடித்து பின்னர் தற்பொழுது Summit, Oratory Preparatory பாடசாலையில் தனது உயர்கல்வியை தொடர்ந்து வருகின்றார்.
கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் அதிக சிரத்தை காட்டும் மிகலன் தனது பல்கலைக்கழக பட்டப்படிப்பை மருத்துவம் அல்லது பொறியியல் துறையில் தொடர எண்ணியுள்ளார். தமிழ் ஆங்கில மொழிகளில் சரளமாக பேசத் தெரிந்த மிகலன் ஜீவானந்தா அவர்கள் Newark நகரில் பிரத்தியேக தமிழ் வகுப்புகளுக்கு சென்று தனது தமிழ் அறிவை மென்மேலும் வளர்த்து வருகின்றார்.
மிகலன் ஜீவானந்தா கடந்த கால சிறந்த கல்வி பெறுபேறுகளை கவனத்தில் கொண்டு Newark நகரில் அமைந்துள்ள Seton Hall பல்கலைக்கழகம் அவரை NJ -LEEP ( New Jersey Law and Education
Empowerment Project) என்ற விசேட கற்கை நெறிக்கு தெரிவு செய்துள்ளமை ஒரு பெருமைக்குரிய விடயமாகும். அமெரிக்க பல்கலைக்கழக புகுமுக தேர்விற்கு இத்தகைய கற்கை நெறிகள் இன்றியமையாதது. (College Bound Program).
நியூ ஜெர்சி மாகாணத்தில் வசிக்கும் மிகலன் ஜீவானந்தா போன்ற பல தமிழ் மாணவ, மாணவியர்கள் கல்வித்துறையில் மிகச் சிரத்தை காட்டி வருவது அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது மட்டுமன்றி, புலம் பெயர்ந்து வாழும் அவர்களின் பெற்றோர்களின் எதிர்கால கனவுகளை நனவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. மிகலன் போன்று கல்வியில் அக்கறை காட்டு எமது மாண மாணவியர்களுக்கு உற்சாகம் அளித்து அவர்களை கல்வித்துறையில் உயர்ந்த நிலைக்கு இட்டு செல்வதன் மூலம் புலம் பெயர்ந்து வாழும் எமது தமிழ் சமூகத்திற்கு பெருமை சேர்க்க முடியும்.
சமூகப்பணிகளில் ஆர்வம் கொண்டு, மாணவத் தலமைத் தகுதியையும் வளர்த்து வரும் மிகலன் ஜீவானந்தா அவர்களின் கல்விப்பயணம் வெற்றியடைய நியூ ஜெர்சி வாழ் தமிழச் சமூகத்தினர் ஒருமித்த குரலில் ஆசிகளையும் ஆசீர்வாதங்களையும் வழங்குகின்றோம்.