இளஞ் சந்ததியினர் வாய்ப்புக்களை சரியாக கையாள வேண்டும்

வேலையில்லாப் பிரச்சினையே இன்று நாடு முழுவதும் இளைஞர், யுவதியரின் பிரதான பிரச்சினையாக இருக்கிறது. அதிலும், 30 வருடங்களுக்கு மேலாக மோதல் சூழலுக்குள் இருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இது பூதாகரமான பிரச்சினையாக வளர்ந்து வருகிறது. இன்றைய இளைஞர்களை மையப்படுத்தி எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கும் இதுவே மூலகாரணமாக இருக்கிறது எனலாம்.

பொதுவாகவே எந்தவொரு நாட்டிலும் தனியார்துறையே அதிகளவு வேலைவாய்ப்புக்களை வழங்கும் துறையாக இருந்து வருகிறது. இலங்கையிலும் சுமார் 88 சதவீதமான வேலை வாய்ப்புக்கள் தனியார்துறையிலேயே காணப்படுகிறது. நிலைமை இப்படியிருக்க, வெறும் 12 சதவீதமான பொதுத்துறை(அரசாங்க) வேலைவாய்ப்புக்களையே அனைவரும் எதிர்பார்ப்பதே வேலையில்லாப் பிரச்சினைக்கு முக்கிய காரணமாகிறது.

இதிலும், மோதல் சூழலுக்குள் சிக்குண்டிருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில், பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு, தனியார்துறையும் பலவீனப்பட்டிருக்கும் நிலையில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் பெரும் சவாலாகவே உள்ளது. எனவே, இன்றைய சூழலில், அதிகளவு வேலைவாய்ப்புக்களை வழங்கக்கூடிய துறைகளை தெரிவுசெய்து அந்தத் துறைகளில் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கு இளைஞர்கள் தம்மைத் தயார்ப்படுத்துவது அவசியமாகும்.

இந்த வகையில், இன்று உலக அளவிலும், அதைவிட வேகமாக இலங்கையிலும் வளர்ச்சி கண்டுவரும் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவத்துறையில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புக்கள் உருவாகி வருகின்றன. கடந்த ஆண்டில் 4 வீதம் உலக சுற்றுலாத்துறை வளர்ச்சி வீதத்தையும் 18.1வீதம் வளர்ச்சியைக் கண்டுள்ள இலங்கையின் சுற்றுலாத்துறையில் வேலைவாய்ப்புக்கள் வேகமாக அதிகரித்து வருகிறது.

2016 – 17ம் ஆண்டுகளில் இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி வீதத்தை 21 வீதமாக உயர்த்துவதற்கு இலங்கை சுற்றுலாத்துறை தந்திரோபாய முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தத் துறையில் வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்கவே செய்யும்.

இலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சி வேகத்துக்கு ஈடுகொடுக்குமளவுக்கு வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை இன்னும் மேம்படுத்தப்பட வேண்டியிருக்கிறது என்றாலும், தனியார்துறையினரின் முயற்சிகள் காரணமாக இன்று  பல்வேறு புதிய ஹொட்டேல்கள் நிறுவப்பட்டு இந்தத்துறை குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி கண்டு வருகிறது.

மாறி வருகின்ற இச்சூழலை இளைஞர் யுவதிகள் வாய்ப்பாக பயன்படத்த வேண்டும். தொழில்களை ஏற்றத்தாழ்வாக பார்க்கும் எமது பாரம்பரிய மனோபாவங்களை கடந்து, அதிகளவு வருமானத்துடன் கௌரவமான தொழில்வாய்ப்புக்களை வழங்கும் இந்தத்துறையில் இணைந்துகொண்டு பயன்பெற இன்றைய இளைஞர், யுவதியர் முன்வரவேண்டும்.

குறிப்பாக, பெற்றோரும், பாடசாலை மற்றும் கல்விச் சமூகமும் மாணவர்களுக்கு இந்தத் துறை தொடர்பாக விளக்கி, எல்லோருமே பல்கலைக்கழக அனுமதி, அரசாங்க வேலைவாய்ப்பு என்று காத்திருந்து காலத்தை வீணாக்காமல், கிடைக்கின்ற வாய்ப்புக்களை சரிவர பயன்படுத்த வழிகாட்டவேண்டும் என்று, யாழ்ப்பாணத்தின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவத்துறை சார்ந்தவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.