ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் ஆரம்பகட்ட நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று காலை மஹரகமவில் நடைபெற்றது. இந்நிகழ்விலேயே ஜனாதிபதி கூறியதாவது………
தோல்விகளை சந்தித்து பிளவடைந்து காணப்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தூய்மையாக்கி எதிர்காலத்தில் மக்களின் பலத்தை கொண்டு எமது கட்சியின் தலைமையில் அரசாங்கம் அமையும் என இவ்விடத்தில் உறுதிபூணுகிறேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் ஆரம்ப நிகழ்வை கட்சியின் மத்திய இடமாக விளங்கும் கொழும்பின் மஹரகம பகுதியில் நடத்துவோம் என கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
முக்கிய பல காரணங்களை கருத்தில் கொண்டே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தும் இந்த நிகழ்வை முன்னெடுத்துள்ளோம்.
தோல்வியடைந்து பிளவுபட்டு காணப்படும் கட்சியை ஒன்றிணைத்து கட்சியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வது, கட்சியின் தோல்விக்கான காரணங்களை இனங்கண்டு மக்களுக்கு தெளிவுப்படுத்தல், களவு, கொள்ளை என தீய செயல்கள் அற்ற தூய்மையான பாதையில் பயணித்தல், மக்கள் பலத்துடன் கூடிய சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்தை அமைத்தல் என பல முக்கிய காரணங்களுக்காகவே கட்சியில் புதிய அங்கத்தவர்களை இணைத்து கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம்.
எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்னர் மக்கள் பலத்தை கொண்டு கட்சியை வலிமைப் பெறச் செய்ய வேண்டும். முன்னைய கால ஆட்சியின் அனுபவங்களை கொண்டு கட்சியை தூய்மைப்படுத்த வேண்டும்.
மேலும் நாட்டு மக்களையும், நாட்டையும் காப்பதே எமது இலக்கு என்றும் கூறியுள்ளார்.