காலத்தை வென்றவன், காவியமானவன் என்றொரு பழைய தமிழ் திரைப்பாடல் உண்டு. இந்தப் பாடல் யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ ஜப்பானில் உள்ள ஒரு சேவலுக்கு நன்றாகவே பொருந்தும்.
ஜப்பானில் உள்ள ஒரு விலங்கியல் பூங்காவில் மரணத்திலிருந்து மூன்று முறை தப்பித்து ’அதிர்ஷ்டக்கார பறவை ’ என்று புகழ் பெற்றுள்ள ஒரு சேவல், விலங்கியல் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் மத்தியில் நம்ப முடியாத வகையில் ஒரு ஈர்ப்பாக மாறியுள்ளது.
மசாஹிரோ என்ற பெயருடைய இந்த சேவல், ஒசாகாவில் ஒரு உள்ளூர் பிரபலமாக மாறியுள்ளது.
கடந்த மாதம் உள்ளூர் போக்குவரத்து போலீஸ் துறையின் கெளரவ தலைவராக இந்த சேவல் பதவி வகித்ததாக கியோடோ செய்தி ஊடக தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஒசாகா நகரில் உள்ள டென்னோஜி விலங்கியல் பூங்காவில் ரக்கூன் என்ற விலங்குக்கு உணவாக இந்த மசாஹிரோ சேவல் படைக்கப்படுவதாக இருந்தது. ஆனால், பெற்றோர் இல்லாத ஒரு வாத்து குஞ்சினை வளர்க்கவும், அதனை பராமரிக்கவும் தற்காலிகமாக மசாஹிரோ சேவல் விட்டு வைக்கப்பட்டது.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இந்த விலங்கியல் பூங்காவில் பறவைகளை தாக்கி வந்த ஒரு காட்டு மரநாயை ஈர்ப்பதற்கு ஒரு நேரடி தூண்டிலாக மசாஹிரோ பயன்படுத்தப்பட்டது.
ஆனால், அன்று அந்த காட்டு நாய் அங்கு வராத காரணத்தால், சேவலின் தலை தப்பியது.
பின்னர் ,இந்த சேவல் விலங்கியல் பூங்காவில் இருந்த சிங்கங்கள் மற்றும் புலிகளுக்கு அன்றைய தினத்தின் இரவு உணவாக இனம் காணப்பட்டு ஒதுக்கீடு செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக மசாஹிரோவின் முறை அன்று வரவேயில்லை என்று கியோடோ செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
தனது வாழ்வின் பயங்கரமான முடிவை, மசாஹிரோ சேவல் மூன்று முறை தவிர்த்து விட்டதால், டென்னோஜி விலங்கியல் பூங்காவின் பணியாளர்கள் அதனிடம் ஏதோ விசேட தன்மை உள்ளது என்று தீர்மானித்து அதனை உணவாக படைக்கப்படும் பட்டியலில் இருந்து நீக்கி விட்டனர்.
அதன் பின்னர், டென்னோஜி விலங்கியல் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களை மசாஹிரோ வெகுவாக ஈர்த்துள்ளது. மசாஹிரோவை சில வினாடிகள் பிடித்து இருந்தால், அதனுடைய அதிர்ஷ்டம் தங்களையும் தொற்றிக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் பலரும் மசாஹிரோவை கையில் தூக்கி வைத்துக் கொள்கின்றனர்.
மக்களின் கவனத்தை இந்தளவு இந்த சேவல் ஈர்க்கும் என்று தான் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை என்று டென்னோஜி விலங்கியல் பூங்காவின் மருத்துவரான ஷின் நிஷிஓகா தெரிவித்தார்.
வாழ்க்கை என்றால் என்னவென்று புரிந்து கொள்வதற்கு , உயிர் கண்டத்தில் இருந்து தப்பித்த மசாஹிரோவை சந்திப்பது ஒரு நாள் வாய்ப்பினை தரும் என்று அவர் மேலும் கூறினார்.