685 கோடி ரூபாய் மதிப்பில் மிகப்பெரிய ஆபரண தொழில் பூங்கா ஒடிசா மாநிலத்தில் அமையவிருக்கிறது.
ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள ராம்தாஸ்பூரில் 685 கோடி ரூபாய் மதிப்பில் கற்கள் மற்றும் ஆபரண உற்பத்தி செய்யும் பூங்காவை அமைத்திட அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இன்று நடைபெற்ற மாநில உயர்மட்டக்குழு ஆலோசனையில் இந்த திட்டத்திற்கான அனுமதி வழங்கப்பட்டதாக மாநில தலைமை செயலாளர் ஏ.பி.பாதி தெரிவித்திருக்கிறார்.
இந்த ஆபரண பூங்கா குறித்து ஏ.பி.பாதி கூறுகையில் “இந்த பூங்காவினால் எராளமான பேர் வேலைவாய்ப்பை பெறுவர். குறிப்பாக பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இதனால் பயன் பெறுவர்.
100 ஏக்கரில் அமையவிருக்கும் இந்த பூங்காவினால் சுமார் 16,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். வைரங்கள் வெட்டுதல், தங்கம், வெள்ளி, பிளாட்டினம், வைர நகைகளை உருவாக்குதல் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள், ஏற்றுமதி நிலையங்கள் ஆகியவை இந்த பூங்காவில் அமையவிருக்கிறது” என்றார்.