வீட்டு விலங்குகளில் நாய்களைப் போலவே பூனைகளும் பாசமானவை. ஆனால் பூனைகளுக்கு என்று தனி குணம் உண்டு. சற்று வன்மம் நிறைந்ததும் கூட. தனக்கு பிடித்தவர்களிடம் மட்டும்தான் பழகும். போகும் வரும். உணவு வாங்கி சாப்பிடும். அப்படி ‘பாசக்கார’ பூனை ஒன்றின் கதை இது.
இந்தோனேஷியாவின் மத்திய ஜாவா பகுதியில் இபு குந்தாரி என்ற பெண் ஒருவர் பூனை ஒன்றை பாசத்துடன் வளர்த்து வந்தார். கடந்த வருடத்தில், குந்தாரி இறந்து போனார். குந்தாரியின் இறுதிச் சடங்கு நடந்த இடத்துக்குப் பூனை வந்துள்ளது. அவரது உடலை அடக்கம் செய்தபோது தரையில் விழுந்து ‘மியாவ் ‘ என கத்தியதாக குந்தாரியின் உறவினர்கள் சொல்கின்றனர்.
குந்தாரி இறந்து போய் விட்டாலும் அவர் காட்டிய பாசத்தை அந்த பூனையால் மறக்க முடியவில்லை போலும். இதனால் தற்போது குந்தாரியின் சமாதியிலேயே அந்த பூனை வாழ்ந்து வருகிறது. அவ்வப்போது உணவுக்காக மட்டும் குந்தாரியின் வீட்டுக்கு செல்கிறது. குந்தாரியின் குழந்தைகள் கொடுக்கும் உணவினை சாப்பிட்டு விட்டு மீண்டும் சமாதிக்கு வந்து விடுகிறது.
இந்த பூனை சமாதியின் அருகிலேயே இருப்பதை பார்த்த கெல்லி கெனின்கானு என்ற 28 வயது இளைஞர், அதனை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார். ஆனால், அந்த பூனை கெனின்கானின் வீட்டில் இருந்து வெளியேறி மீண்டும் சமாதிக்கு வந்து விட்டது. இது போன்று பல முறை நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்துதான் கெனின்கானு, பூனையின் நடவடிக்கைகளை கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறார். அப்போதுதான் பூனை சமாதியில் வாழ்வதற்கான பின்னணித் தெரிய வந்துள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், இந்த பூனையையும் அதன் தாய் பூனையையும் குந்தாரி வளர்த்து வந்துள்ளார். தாய்பூனை இறந்த பின்னர், இந்த குட்டி பூனை வீட்டில் இருந்து வெளியேறி சமாதிக்கே வந்து விட்டது. சில நேரங்களில் அழக் கூட செய்கிறது. இரவு நேரத்தில் சமாதியில்தான் படுத்து உறங்குகிறது. அதற்கு யாரும் இல்லை என்று நினைத்துதான் எனது வீட்டுக்கு கொண்டு சென்றேன். ஆனால் உடனே இங்கே வந்து விடும். பிறகுதான் பூனையின் நடவடிக்கைகளை கண்காணிக்கத் தொடங்கினேன். அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி செல்வதையும் அவரது குழந்தைகள் இந்த பூனைக்கு பாசத்துடன் உணவு அளிப்பதையும் பார்த்தேன் ”என்றார்.
விலங்குகள் இது போன்று வளத்தவர்கள் மீது பாசம் காட்டுவது புதிதல்ல. நம்ப முடியாத அளவுக்கு சில உண்மைச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. ஆனால், பூனை விஷயத்தில் சமாதியில் வசிப்பதுதான் புதியத் தகவலாக இருக்கிறது. கடந்த வருடம் தாய்லாந்தில் ஒரு சம்பவம் நடந்தது. ஜோவ் லாங் என்ற மூன்று வயது நாய் தன்னை வளர்த்தவருடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் தவறி விழுந்தது. அதன் உரிமையளரும் அதனை பார்க்காமல் சென்று விட்டார். கடந்த ஒரு ஆண்டு காலமாக ஜோவ் லாங், தன்னை வளர்த்தவர் வந்து அழைத்து செல்வார் என்று எதிர்பார்த்து அதே இடத்தில் பொறுமையுடன் காத்திருந்தது. ஆனால் உரிமையாளர் வரவில்லை. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி அதே இடத்தில் வாகனம் ஒன்றில் அடிபட்டு ஜோவ் லாங் பரிதாபமாக இறந்து போனது.
ஜப்பானில் ஹச்சிகோ என்ற நாயை, டோக்கியோவைச் சேர்ந்த பேராசிரியர் இசாபுரா யூனோ என்பவர் வளர்ந்து வந்தார். ஜப்பானின் அகிதா ரக நாய் இது. ஆதரவற்று தெருவில் நின்று கொண்டிருந்த குட்டியை, ஹச்சிகோ என பெயரிட்டு யூனோ வளர்த்தார் தனது மகனைப் போலவே ஹச்சிகோவை நடத்தினார் யூனோ. ஹச்சிகோவும் பேராசிரியர் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தது. டோக்கியோ நகரில் உள்ள ஷிபுயா ரயில் நிலையத்தில் இருந்துதான் பேராசிரியர் தினமும் பணிக்கு செல்வார். ரயில் நிலையம் வரை சென்று பேராசிரியரை ஹச்சிகோ தினமும் வழி அனுப்பி வைக்கும். மாலையில் அவர் திரும்பும் போதும் ரயில் நிலையத்தில் ஹச்சிகோ அவருக்காக காத்திருப்பதை வழக்கமாக கொண்டிருந்தது.
ஒருநாள் வேலைக்குச் சென்ற யூனோ திரும்பி வரவில்லை. உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்திருந்தார். மீண்டும் அனாதையான ஹச்சிகோவை ஷிபுயா ரயில் நிலைய தோட்ட பராமரிப்பாளர் வளர்து வந்தார். ஆனால், யூனோ திரும்ப வந்து தன்னை அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் தினமும் காலையும் மாலையும் ஷிபுயா ரயில் நிலையம் செல்வதை ஹச்சிக்கோ வழக்கமாக கொண்டிருந்தது. ஆனால் யூனோ வரவில்லை. இப்படியாக 9 ஆண்டுகள் கழிந்தது. கடந்த 1935-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி ஷிபுயா ரயில் நிலையம் அருகிலேயே ஹச்சிகோவின் உடலில் இருந்து உயிர் ஏமாற்றத்துடன் பிரிந்தது.
ஜப்பானிய மக்கள் ஹச்சிகோவின் விசுவாசத்தை மெச்சி ஷிபுயா ரயில் நிலையத்தில் வெண்கலச் சிலை நிறுவினர். ஹச்சிகோ வாழ்க்கையை மையமாக வைத்து பல ஜப்பானிய படங்கள் வந்துள்ளன. ஹாலிவுட் படமும் இருக்கிறது. ஜப்பானிய பள்ளிக்குழந்தைகளின் பாடப் புத்தகத்திலும் ஹச்சிகோசின் வாழ்க்கை வரலாறு இடம் பெற்றுள்ளது.