1. கஜலட்சுமி :
ஒரு நாட்டின் ஆளும் பொறுப்பையே அளிப்பவள் கஜலட்சுமி. தற்கால சூழல்படி முதல்-அமைச்சர், பிரதமர் போன்றும் மற்றும் உயர் பதவி போன்றும் கஜலட்சுமியை வழிபடுவோருக்கு கிட்டும்.
2. ஆதி லட்சுமி :
மகாவிஷ்ணுவின் இடப்பாகத்திலிருந்து தோன்றியவர் ஆதிலட்சுமி. இவளுக்கு இரண்டே கரங்கள் உள்ளன. உலகத்தின் சகல உயிர்களின் இயக்கத்துக்கான சக்தியை அளிப்பவள் இவள். எந்தக் காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் ஆதிலட்சுமியை தொழுது ஆராதித்து தொடங்கினால் எந்த காரியமும் நிச்சயம் முழு வெற்றியையும் அளிக்கும். எதிர்பார்த்ததைவிடச் சிறந்த பலனும் கிடைக்கும்.
3. சந்தானலட்சுமி :
பொருள் செல்வத்தைவிட நன்மக்கட் செல்வமே வாழ்க்கையில் மானுடர்க்கு சரியான பாதுகாப்பு ஆகும். சந்தான லட்சுமியை தொழுது வழிபடுவதன் மூலம் நன்மக்கட் பேற்றினை அடைய முடியும்.
4. தனலட்சுமி :
பொருட்செல்வம் வாழ்க்கையில் இன்றியமையாததாக இருக்கிறது. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது சான்றோர் மொழியல்லவா? குற்றமற்ற நல்வழியில் நம் தேவைகேற்ப பொருட் செல்வ வளம்பெற தனலட்சுமியை துதித்து வழிபட வேண்டும்.
5. தானிய லட்சுமி :
மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு பொருட்செல்வம் அவசியந்தான், என்றாலும் பொன்னையும் பொருளையும் உண்டு வாழ்ந்து விட முடியுமா? வாழ்க்கைக்கு உணவு தானே முக்கியம். உணவுக்கு ஆதாரமாக இருப்பது தானியமல்லவா! தானியம் வாழ்க்கையில் குறைவராமல் கிடைத்துக் கொண்டேயிருக்க தானியலட்சுமியை வழிபட வேண்டும்.
6. விஜயலட்சுமி :
வாழ்க்கையில் மனிதனுடைய வெற்றிகளுக்கெல்லாம் ஆதாரமாக நிற்பவள் விஜயலட்சுமி. பெறக்கூடிய வெற்றி சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் விஜயலட்சுமியின் அருட்கண் பார்வை இருந்தாலொழிய வெற்றி சாத்தியம் இல்லை.
தோல்வியற்ற வெற்றியை வாழ்நாள் முழுவதும் பெற விரும்பும் ஒவ்வொருவரும் விஜயலட்சுமியை துதித்து வழிபட்ட பின்னரே எந்த முயற்சியையும் தொடங்க வேண்டும். விஜயலட்சுமியை அலட்சியம் செய்து தொடங்கப்பெறும் எந்த முயற்சியிலும் வெற்றியே கிட்டாது என உணர வேண்டும்.
7. வீரலட்சுமி :
ஒரு மனிதனிடம் செல்வச் செழிப்பும் சுகபோகச் சூழலும் அமைந்திருந்தாலும் அவன் துணிச்சலும், வீரமும் அற்ற கோழையாக இருப்பின் பிற எந்த செல்வத்தாலும் அவனுக்கு பயன்கிட்டாது. ஆகவே, ஒரு மனிதன் எந்த நிலையில் இருந்தாலும் மன உறுதியையும், துணிச்சலையும் வீரத்தையும் பெற்ற வீரலட்சுமியை அன்றாடம் தவறாது வழிபட வேண்டும்.
8. மகாலட்சுமி :
மகாலட்சுமியை வழிபட எல்லா செல்வங்களும், ஆற்றல்களும் ஒன்று சேர்ந்து நமக்கு கிடைக்கும்.