பலரும் அடிக்கடி டீ குடிப்பது கெட்ட பழக்கம் என்று சொல்வார்கள். உண்மையில் அளவுக்கு அதிகமாக டீ குடித்தால் தான் அது ஆபத்தானது. ஆனால் அளவாக குடித்தால், அதனால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா?
மேலும் சில ஆய்வுகளிலும் டீ பல உடல்நல பிரச்சனைகளைத் தடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கு தினமும் டீ குடிப்பதால் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.
சர்க்கரை நோய்
நியூட்ரிஷன் புல்லட்டின் என்னும் பத்திரிக்கையில் வெளிவந்த ஆய்வில், தினமும் 2 கப் டீ குடித்தால், டைப்-2 சர்க்கரை நோயில் இருந்து நல்ல பாதுகாப்பு கிடைப்பதாக தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம், டீயில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான்.
இதய ஆரோக்கியம்
மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், டீ குடிப்பதால், இதய நோய் வரும் அபாயம் குறைவதாக தெரிய வந்துள்ளது. இதற்கு டீயில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம். மேலும் அங்குள்ள ஆராய்ச்சியாளர்கள், தினமும் டீயைக் குடித்து வந்தால், 7-8 சதவீதம் இதய நோய் வரும் அபாயம் குறைவதாகவும் நம்புகின்றனர்.
மார்பக புற்றுநோய்
டீயில் உள்ள அதிகப்படியான பாலிஃபீனால்கள், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும். மேலும் ஆய்வு ஒன்றில், டீயில் உள்ள பாலிஃபீனால், 21 சதவீதம் மார்பக புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைப்பதாக தெரிய வந்துள்ளது.
இரத்த அழுத்தம்
மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், தினமும் 8 கப் டீ குடித்தால் இரத்த அழுத்தம் குறைவதாக கண்டறிந்துள்ளனர்.
வயிற்று அல்சர்
ப்ளாக் டீ குடித்தால் நோயெதிர்ப்பு சக்தி ஊக்குவிக்கப்படும் என்பது தெரியும். ஆனால் ஆய்வு ஒன்றில், ப்ளாக் டீ வயிற்று அல்சரை சரிசெய்வதாக தெரிய வந்துள்ளது.
கருப்பை புற்றுநோய்
அமெரிக்கன் ஜெர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளிவந்த ஆய்வில், ப்ளாக் டீ குடிப்பதால் கருப்பை புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதாக தெரிய வந்துள்ளது.
எனவே பெண்கள் தினமும் 2 கப் ப்ளாக் டீ குடிப்பது மிகவும் நல்லது. மேலும் ப்ளாக் டீயில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்கள் ஏராளமாக உள்ளது.