உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் கெர்ரி மாவட்டத்தின் நன்தர்புர்வா பகுதியை சேர்ந்தவர் ராமானந்த். நான்கு பெண் குழந்தைகளுக்கு தந்தையான இவர் தனது வீட்டினருகே வசித்துவந்த இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார்.
தனது ஆசைக்கு தடையாக இருக்கும் மனவியையும், குழந்தைகளையும் தீர்த்துக்கட்ட முடிவெடுத்த ராமானந்த், கடந்த 22-1-2010 அன்று தனது மனைவி சங்கீதா(35), மகள்கள் துளசி(7), லட்சுமி(5), காஜல்(3) மற்றும் இரண்டுமாத பெண்குழந்தையை கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொன்றார்.
பிரேதங்களை எப்படி மறைப்பது? என்று யோசித்த அவர், திருடர்கள் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்துவிட்டு, தனது மனைவி மற்றும் மகள்களையும் கொன்ற பின்னர், வீட்டையும் தீயிட்டு கொளுத்திவிட்டு தப்பிச் சென்றதாக நாடகம் ஆடினார்.
எனினும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசாரிடம் பின்னர் இவர் உண்மையை ஒப்புக் கொண்டார். லக்கிம்பூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இந்த கொடூர கொலை வழக்கு விசாரணையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
குற்றவாளிக்கு மரண தண்டனையுடன் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ராஜ்பீர் சிங் உத்தரவிட்டுள்ளார்.