எப்போது வீடு திரும்ப வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவே முடிவு செய்வார் என அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி.ரெட்டி கூறியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அப்பல்லோ வைத்தியசாலையின் மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர் டி.வி.தேவராஜன் எழுதிய மருத்துவ புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக அப்பல்லோ வைத்தியசாலையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.
இதில் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து டாக்டர் பிரதாப் சி.ரெட்டியிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது.
“முதல்வருக்கு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது நன்றாக தெரிகிறது. கடவுளுக்கு மிக்க நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். முதல்வர் வேகமாக குணம் அடைந்து வருகிறார். அவர் மிகவும் மனநிறைவோடு இருக்கிறார். மன நிறைவு என்பதற்கு நான் சொல்லும் பொருள் அவர் முழுமையாக குணம் அடைந்துவிட்டார்.
அவரும் நாங்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைவது என்னவென்றால், அவர் நன்றாக குணம் அடைந்துள்ளதுடன், தான் அடைந்துள்ள முன்னேற்றத்தை அவரே கண்காணிக்கிறார்.
மருத்துவமனை செய்தது ஒரு பங்கு என்றால், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் அவர் குணம் அடைய வேண்டும் என பிரார்த்தனை செய்தது மறுபக்கம் பலனளித்தது. அந்த பிரார்த்தனைகள் அவரை பூரண குணம் அடைய வைத்து உள்ளது. பிரார்த்தனைகள்தான் அவர் உடல் நலம் தேற மிகவும் உதவிகரமாக இருந்தது.
அவர் எப்போது வீடு திரும்புவார் என எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். ஜெயலலிதாவும் கூட தான் எப்போது வீடு திரும்புவது என்பது பற்றியும், மக்கள் தனக்கு கொடுத்த பொறுப்பை எப்போது நிறைவேற்றலாம் என்றும் ஆசையோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்.
அவர் எப்போது சாதாரண வார்டுக்கு போவார்? எப்போது வீடு திரும்புவார்? என்பது பற்றியெல்லாம் அவர் தான் முடிவு செய்வார். அவரை பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். தான் எப்போது வீடு திரும்ப வேண்டும் என்பதை அவரே விரைவில் எங்களிடம் கேட்பார் என எதிர்பார்க்கிறோம்” என்று அப்பல்லோ வைத்தியசாலையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி தெரிவித்தார்.
இந்த கருத்துக்களைத் தொடர்ந்து “டாக்டர்களையும், நர்சுகளையும் ஜெயலலிதா கட்டுப்படுத்துகிறார் – அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர்.ரெட்டி சொல்கிறார்” என்று டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் இன்று வெளியிட்டுள்ள செய்தியின் தலைப்பில் உள்ளது.
சுற்றி, சுற்றி சொல்ல காரணம்?
அப்பல்லோவிலோ, நோயாளியே விரும்பி வெளியேறும்வரை காத்திருக்கப்போவதாக கூறியுள்ளார் மருத்துவமனை தலைவர்.
இதை நேரடியாக சொல்லாமல், விக்ஸ் என்பதை சுற்றி சுற்றி எழுதும் டாக்டரை போல கூறியுள்ளார் ரெட்டி. ஜெயலலிதா அட்மிட் ஆகியுள்ளதால், ஏகப்பட்ட நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு திருப்பியனுப்பப்பட்டு வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
எனவே, அம்மா மனமிறங்குவார்களா என்பதுதான் அப்பல்லோவின் எதிர்பார்ப்பாக இருக்குமோ? என்று இந்திய ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.