அம்பாறை – மாணிக்கமடுவில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பாக இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நசீர் உட்பட தேரர் குழு நேற்று(04) குறித்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர்.
இதன் போது குறித்த இடத்திற்கு அருகில் மக்கள் வந்து தங்கியிருந்து செல்ல சத்திரம் அமைக்க காணி வேண்டும் என தேரர்கள் தற்போது கேட்டுள்ளனர்.
இதனால் சிலை விவகாரம் தற்போது புதிய கோணத்தில் மாயக்கல்லி மலையில் சத்திரம் அமைக்கின்றமை தொடர்பான விவகாரமாக மாறியுள்ளது.
அரசாங்க அதிபர் துசித வணிகசேகர நடாத்திய கூட்டத்தில், மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை அகற்றப்பட வேண்டும் என சிறுபான்மையினர் குரலெழுப்பிய போது அங்கிருந்த தலைமை பௌத்த மத குரு கிரிந்திவெல சோமரத்ன தேரர் அளித்த விளக்கத்தால் சிறுபான்மையினர் மேற்படி கூட்டத்தைப் பகிஸ்கரித்தனர்.
கிரிந்திவெல சோமரத்ன தேரர் விளக்கம் அளிக்கையில், இது பௌத்த பூமி. புனித திகவாவிக்கு செல்லும் மக்களுக்கு தங்கிச் செல்ல குறித்த இடத்தில் சத்திரம் அமைக்க இருக்கின்றோம் என கூறினார்.
மேலும், தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம் எல்லையிட்ட பிரதேசத்திற்கு அப்பாலுள்ள காணியில் சத்திரம் அமைக்க அனுமதி வேண்டி தேரர் குழுவினர் இறக்காமம் பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்தனர். அதற்கு பிரதேச செயலாளர், அனுமதியை உடனடியாகத் தர முடியாது. தங்கள் கோரிக்கையை எழுத்து மூலம் தாருங்கள். சட்ட திட்டங்களுக்கு அமைவாக தீர்மானம் மேற்கொண்டு பார்போம் என்றார்.
இதற்கு அமைச்சர் ஒருவரின் உதவி கிடைத்துள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் இதற்கு எந்த அனுமதியும் அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை எனத் தெரிகின்றது.
இதனிடையே, சிலை வைத்தவர்களுக்கு எதிராக நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளதாகவும் நீதிமன்ற விசாரணையின் பின்னர் அச்சிலை அகற்றப்படுமெனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சாய்ந்தமருதில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறியிருந்தார்.
இதே வேளை புத்தர் சிலை வைத்த விவகாரம் சிறுபான்மையின மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமையும் இது குறித்து கொழும்பிலிருந்து அகில இலங்கை இந்து மாமன்றமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.