‘சைத்தான்’ பட இசை வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் விஜய் ஆண்டனி, சிபிராஜ், இயக்குனர் சசி, ஒய்.ஜி.மகேந்திரன், அருந்ததிநாயர், கிட்டி, ஷோபா சந்திரசேகர், பாத்திமா விஜய் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
விழாவில் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசும்போது, “திரையுலகின் வெறித்தனமான ‘சைத்தான்’ விஜய் ஆண்டனி. தன் நம்பிக்கை என்னும் புத்தகமாக செயல்படும் அவரின் வெற்றிக்கு முதுகெலும்பாய் இருப்பவர், அவருடைய துணைவியார் பாத்திமா விஜய் ஆண்டனி” என்றார்.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது “விஜய் ஆண்டனி படங்களின் தலைப்புகள் எதிர்மறையாக இருந்தாலும், அந்த படங்களின் கதை களங்கள் எல்லாம் ரசிகர்களின் மனதை வெல்லக் கூடியதாகத் தான் இருக்கும். தமிழ், தெலுங்கு மட்டுமல்ல அனைத்து தரப்பு ரசிகர்களின் மத்தியிலும் அவர் ஹீரோவாக வலம் வருவது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது.
என்னுடைய மகன் விஜயின் வளர்ச்சியை கண்டு நான் எப்படி மகிழ்ச்சி கொள்கிறேனோ, அதேபோல் தான் விஜய் ஆண்டனியின் வளர்ச்சியையும் கண்டும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பேசினார்.
விஜய் ஆண்டனியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் எஸ்.ஏ.சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது.