வவுனியா-வைரவபுளியங்குளம் பகுதியில் தனது கற்றல் நடவடிக்கைகாக வந்த மாணவி ஒருவரை கடந்த சனிக்கிழமை(05) இளைஞர்கள் சிலர் கடத்திச் சென்று புதுக்குளம் பகுதியில் விட்டுச் சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றுக்கு வந்த உயர்தர மாணவி ஒருவரை சில இளைஞர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர். அந்த மாணவி அங்கிருந்த விளையாட்டு மைதானத்திற்கு அண்மையில் வந்த போது குறித்த இளைஞர்கள் அந்த மாணவி வசம் இருந்த கைப்பை மற்றும் தொலைபேசி என்பவற்றை பறித்ததுடன் தொலைபேசியை செயலிழக்கச் செய்துள்ளனர்.
அதன் பின்னர் குறித்த மாணவியை புதுக்குளம் பகுதியில் உள்ள வீதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். அந்த மாணவியை எவ்வாறு அங்கு கொண்டு சென்றார்கள் என்பது குறித்து அந்த மாணவிக்கு தெரியவில்லை.
சுமார் அரை மணித்தியாலத்திற்குள் இந்தச் சம்பவங்கள் இடம்பெற்று முடிந்த நிலையில் புதுக்குளம் பகுதியிலிருந்து குறித்த மாணவி தனது உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து குறித்த மாணவி அவருடைய வீட்டாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மாணவிக்கு எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படாத காரணத்தாலும் தமது பிள்ளையின் எதிர்காலம் கருதியும் பெற்றோர் பொலிசில் முறைப்பாடு செய்யவில்லை எனத் தெரியவருகிறது.
இதே வேளை, குறித்த விளையாட்டு மைதானத்தை அண்டிய பகுதியிலே பொலிசாரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுமாறும் பொலிஸ் காவலரண் ஒன்றை அமைக்குமாறும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.