நாகார்ஜுனாவின் 2 மகன்கள் நாகசைதன்யா, அகில் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. நடிகை சமந்தா, ஆடை வடிவமைப்பாளர் ஸ்ரேயா ஆகியோரை அவர்கள் மணக்கிறார்கள்.
நாகார்ஜுனா மகன்கள்
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவுக்கு நாகசைதன்யா, அகில் என்று 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் நாகசைதன்யா, நாகார்ஜுனாவுக்கும் லட்சுமிக்கும் பிறந்தவர். இவர்கள் திருமணம் 1984–ம் ஆண்டு நடந்தது. பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 1990–ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். லட்சுமி மறைந்த பழம்பெரும் சினிமா தயாரிப்பாளர் ராமாநாயுடுவின் மகள் ஆவார். விவாகரத்துக்கு பிறகு நாகசைதன்யா தாயுடன் சென்னையில் தங்கி பள்ளி படிப்பை முடித்தார்.
அதன்பிறகு ஐதராபாத் சென்று பட்ட படிப்பு படித்தார். இதற்கிடையில் நாகார்ஜுனா தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த அமலாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மகன்தான் அகில். நாகசைதன்யாவும் அகிலும் தற்போது தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகர்களாக உள்ளனர்.
மகன்களின் காதல்
நாகார்ஜுனாவுக்கு சொந்தமாக ஐதராபாத்தில் அன்னபூர்ணா என்ற பிரமாண்ட ஸ்டுடியோ மற்றும் பள்ளிக்கூடங்கள் என்று ஏராளமான சொத்துகள் உள்ளன. நாகார்ஜுனாவின் இரண்டு மகன்களும் காதலில் சிக்கி உள்ளனர்.
நாகசைதன்யா நடிகை சமந்தாவையும், அகில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஸ்ரேயாவையும் காதலிக்கிறார்கள். இந்த காதல் விவகாரம் நாகார்ஜுனாவுக்கு முதலில் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தாலும் பின்னர் ஏற்றுக்கொண்டார். அவர்கள் திருமணத்துக்கும் சம்மதம் தெரிவித்து உள்ளார்.
இதைத்தொடர்ந்து நாகசைதன்யா–சமந்தா, அகில்– ஸ்ரேயா ஆகியோரின் திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. அகிலுக்கும்–ஸ்ரேயாவுக்கும் அடுத்த மாதம் (டிசம்பர்) 9–ந் தேதி ஐதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. இதற்கான அழைப்பிதழ்கள் அச்சிட்டு நடிகர்–நடிகைகள் மற்றும் உறவினர்களுக்கு வினியோகித்து வருகிறார்கள். அடுத்த வருடம் ஆரம்பத்தில் நாகசைதன்யா–சமந்தா திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.
விருந்து
இரண்டு ஜோடிகளும் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுக்கு சிறப்பு விருந்து கொடுத்தனர். இந்த விருந்தில் 4 பேரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமந்தா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.