9 ஆண்டுகளாக தாலி கட்டாமல் குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்ய மறுக்கும் என்ஜினீயர் மீது கலெக்டரிடம் பெண் புகார் கொடுத்தார்.
பட்டதாரி பெண்
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சம்பத் தலைமை தாங்கினார். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பேளூர் சர்க்கார் நாட்டாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சத்யா(வயது 30). எம்.சி.ஏ. முடித்துள்ள இவர் நேற்று தனது தாய் சின்னபொன்னு என்பவருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
இதையடுத்து அவர் கலெக்டர் சம்பத்தை நேரில் சந்தித்து மனு ஒன்று கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:–
நானும், எங்கள் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரும் 9 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். எங்களுடைய காதலுக்கு அவருடைய வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நாங்கள் தாலி கட்டாமல் என்னுடைய வீட்டில் குடும்பம் நடத்தினோம். அவர் சிங்கப்பூரில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.
தற்கொலை செய்வோம்
இந்தநிலையில் கடந்த 2014–ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த அவர் திடீரென என்னிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். இதுகுறித்து அவரிடம் நான் கேட்டேன். அதற்கு அவர், தான் வீட்டில் பெற்றோர் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய போவதாக கூறினார். இதுதொடர்பாக ஆத்தூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அதன்பேரில் போலீசார் அவர் உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதனிடையே மீண்டும் வெளிநாட்டுக்கு சென்ற அவர் தற்போது கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஊர் திரும்பி உள்ளார். மேலும் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு நடைபெற்று வருகிறது. எனவே 9 ஆண்டுகளாக தாலி கட்டாமல் குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்ய மறுக்கும் என்ஜினீயரை என்னுடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நான் எனது குடும்பத்துடன் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார். இந்த மனுவை கலெக்டரிடம் சத்யா கொடுக்கும் போது கண்ணீர் விட்டு கதறி அழுதார். அதற்கு கலெக்டர் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.