படைப்புத் தொழிலை சிவபெருமானிடம் இருந்து பெற்றார் பிரம்மதேவன். முற்காலத்தில் ஈசனைப் போலவே, பிரம்மாவுக்கும் 5 தலைகள் இருந்துள்ளது. இதனால் தானும் சிவனுக்கு நிகரானவரே என்று பிரம்மா கர்வம் கொண்டார். பிரம்மனுக்கு பாடம் புகட்ட எண்ணிய ஈசன், பிரம்மாவின் 5 தலைகளில் ஒன்றை கொய்துவிட்டார். மேலும் படைப்புத் தொழிலையும் அவரிடம் இருந்து பறித்தார்.
இதையடுத்து பிரம்மதேவன் தன்னுடைய தவறை உணர்ந்து, ஈசனிடம் மன்னிப்பு கோரினார். பூலோகத்தில் ஆங்காங்கே சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபடுமாறும், தகுந்த நேரம் வரும்போது பலன் கிடைக்கும் என்றும் சிவபெருமான் அருளினார். இதையடுத்து பிரம்மதேவன் பூலோகம் வந்து ஆங்காங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இறுதியில் திருப்பட்டூர் என்னும் தலத்திற்கு வந்து 12 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவரது வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன், பிரம்மனுக்கு மீண்டும் படைப்புத் தொழிலை அளித்து ஆசி வழங்கினார்.
பிரம்மன் வழிபட்ட இடம் என்பதால், இந்தத் தலத்தில் உள்ள ஈசன் ‘பிரம்மபுரீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். இந்த ஆலயம் சிவ ஸ்தலமாக இருந்தாலும், இங்குள்ள பிரம்மா புகழ்பெற்று விளங்குகிறார். இங்கு பிரம்மா பிரமாண்ட தோற்றத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். குரு பரிகாரத் தலமாக திகழும் இந்த ஆலயத்தில், மூலவருக்கு வடபுறத்தில் தனிச் சன்னிதியில் 6 அடி உயரத்தில் தியான நிலையில் வீற்றிருக்கிறார் பிரம்மா.
குரு பகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், இந்த ஆலயத்தில் உள்ள பிரம்மாவுக்கு, வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. குருப்பெயர்ச்சி அன்றும், இத்தல பிரம்மாவுக்கு பரிகார யாக பூஜைகள் நடைபெறும். 7-ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கான பரிகார தலமாகவும் இந்த ஆலயம் திகழ்கிறது.
பிரம்மா விசேஷமானவராக இருந்தாலும், இத்தலத்தில் ஈசனே பிரதானம். சிவபெருமானை வழிபடும் பக்தர்களுக்கு, பிரம்மதேவனும் அருள்செய்வார். இந்த ஆலய ஈசனை வழிபட்டதால்தான், பிரம்மாவின் தலையெழுத்து மாறியது. எனவே இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்களின் தலையெழுத்தை இத்தல பிரம்மதேவர், மங்களகரமாக மாற்றித்தருவார் என்பது நம்பிக்கையாக உள்ளது.
சென்னையில் இருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிறுகனூர் என்ற ஊர். இங்கிருந்து திருப்பட்டூர் செல்லும் சாலையில் 4 கிலோமீட்டர் தூரம் சென்றால், பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தை அடையலாம்.