போராட்டத்தின் பின்னணியில் அரசியல் நோக்கமா?

யுத்தத்தின் போது அங்கவீனமடைந்த முப்படை மற்றும் பொலிஸ் துறையைச் சேர்ந்த படையினர் ஒய்வூதியம் தொடர்பான கோரிக்கையை முன்வைத்து கடந்த 31ம் திகதி (ஒக்டோபர் மாதம்) கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, தமது கோரிக்கை நிறைவேறும் வரையும் இப்போராட்டத்தைத் தொடரப் போவதாகக் கூறி மறியல் போராட்டத்திலும், உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டு வந்தனர்.

இவர்கள் கடமையின் போது அங்வீனமடைந்தவர்கள். ஆனால் பாதுகாப்பு சேவையில் 12 வருடங்களைப் பூர்த்தி செய்யாதவர்கள். இடைநடுவில் சேவையிலிருந்து விலகியவர்கள்.

இவர்கள் இப்போது இம்மறியல் போராட்டத்தை முன்னெடுத்த போதிலும், இவர்களது பிரச்சினை 2008ம் ஆண்டு முதல் நீடித்து வருகின்றது.

அக்காலப் பகுதியில் இவர்களது இப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு அன்றைய அரசு நடவடிக்கை முன்னெடுக்கவில்லை. ஆனால் இவ்வாறான போராட்ட நடவடிக்கைகளில் இவர்கள் அப்போது ஈடுபடவில்லை. இது மறைக்க முடியாத உண்மை.

இருந்த போதிலும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 09ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பதவிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் அங்கவீனமடைந்த இப்படையினர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து அவர்களை வரவழைத்து கலந்துரையாடி கேட்டறிந்தது.

அச்சமயம் இவர்கள் 28 கோரிக்கைகளைப் பாதுகாப்பு அமைச்சிற்கு முன்வைத்தனர். அவற்றில் 25 கோரிக்கைகளுக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டது.

எஞ்சிய மூன்று கோரிக்கைகளில் இரண்டு கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி, அமைச்சரவை அங்கீகாரத்துடன் தீர்வினைப் பெற்றுக் கொடுத்தார்.

இதன் விளைவாக அங்கவீனமடைந்த படையினர் முன்வைத்த கோரிக்கைகளில் ஒன்று எஞ்சி இரு-ந்தது. அக்கோரிக்கை 2017ம் ஆண்டு பெப்ரவரி மாதம் தீர்த்து வைக்கப்படும் என்று ஜனாதிபதியினாலும் அரசாங்கத்தினாலும் வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது.

இக்கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு அங்கவீனமடைந்த இப்படையினருக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான சட்டத்திலுள்ள ஓரிரு ஷரத்துக்களில் திருத்தங்களை செய்ய வேண்டும்.

அதேநேரம் இக்கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு பணமும் மிக அவசியமானது. அப்பணத்தை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகவே பெற்றுக் கொள்ள முடியும்.

இக்காரணங்களின் அடிப்படையில் தான் இக்கோரிக்கை 2017ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டது ‘ என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி நேற்று முன்தினம் தெரிவித்திருக்கின்றார்.’

அங்கவீனமடைந்த படையினரின் இக்கோரிக்கைைய நிறைவேற்றுவது தொடர்பில் வாக்குறுதி அளித்ததோடு நின்று விடாமல் அதனை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளையும் நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது’ என்றும் பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.

இருந்தும் இவற்றைப் பொருட்படுத்தாமல் தான் இவர்கள் கடந்த வாரம் ஆர்ப்பாட்டத்தி-ல் ஈடுபட்டதோடு உண்ணாவிரதத்தையும் ஆரம்பித்தனர்.

இவ்வாறான சூழலில் பொலிஸார், இப்படையினர் புறக்கோட்டையிலிருந்து ஜனாதிபதி செயலகம் வரை பேரணியொன்றை நடாத்தத் திட்டமிட்டிருப்பதாகவும், அவ்வாறு பேரணி நடாத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் கோரினர்.

பொலிஸாரின் இக்கோரிக்கையைப் பரிசீலனை செய்த நீதவான், அங்கவீனமடைந்த படையினர் முன்னெடுத்து வரும் போராட்டம் இதுவரையும் பொதுமக்களுக்கு இடையூறாக அமையவில்லை.

அதனால் தடையுத்தரவு வழங்க முடியாது’ எனக் குறிப்பிட்டார்.இதேநேரம்,இப்படையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தி-ய ஐந்து பேர் தமது கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் சுமுகமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

என்றாலும் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள் இவர்களது போராட்டத்திலும் அற்ப அரசியல் இலாபம் பெற்றிடத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இவ்வாறான சூழலில் நல்லாட்சி மீது பொறாமை கொண்ட சிலரும், சிங்கள ராவய மற்றும் ராவணா பலய அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் காலிமுகத் திடலில் கூடி தடைகளையும் மீறி ஜனாதிபதி செயலகத்தினுள் அத்துமீறி பிரவேசிக்க முயற்சி செய்தனர்.

இதன் போது பொலிஸாருடனும், ஜனாதிபதி செயலகப் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடனும் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

இதன் விளவாக பதற்ற நிலைமை ஏற்பட்டது. இந்நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவென கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தையும், தண்ணீரைப் பீச்சி அடிக்கவும் வேண்டிய நிலைக்கு பொலிஸார் உள்ளாகினர்.

ஆனால் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளையும் பொருட்படுத்தாது இப்போராட்டத்தை முன்னெடுத்த அங்கவீனமடைந்த படையினரின் இப்போராட்டத்தை வன்முறை நிலைமைக்கு மாற்றியதை எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அதேநேரம் இப்படையினர் மறியல் போராட்டத்தை முன்னெடுத்தமைக்கு அரசியல் பின்நோக்கமே காரணம் என்று மக்கள் கருதுகின்றனர். அவ்வாறான நோக்கத்தில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தால் அது இப்படையினரின் அர்ப்பணி-ப்புக்களைப் பெறுமதியற்றதாக்கி விடும் என்பதே பரவலான அபிப்பிராயம்.

அதன் காரணத்தினால் அங்கவீனமடைந்த படையினர் தமது போராட்டத்தில் எவரும் அற்ப அரசியல் இலாபம் தேடிட இடமளித்திடக் கூடாது. அதுவே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.