இந்தியாவில் இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த ரூ.500 மற்ரும் ரூ.1000 நோட்டுகள் இன்று முதல் செல்லாதவையாகிவிட்டன. பழைய நோட்டுகளுக்கு மாற்றாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி நேற்றிரவு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
இதற்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பும், அதே வேலையில் கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. பல்வேறு முக்கியத் தலைவர்களும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வரும் வேலையில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு, மோடியின் இந்த அதிரடி முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
குஷ்பு தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டின் பெரிய உயிர்க்கொல்லி நோயாக இருப்பது கருப்பு பணம் என்றும், அதனை வேறோடு ஒழிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
‘இத்திட்டத்தினை 4 மாதங்களாக மிகவும் ரகசியமாக செய்துவந்ததற்காக முதலில் பிரதமர் மோடியை பாராட்டியே ஆக வேண்டும்’,‘ இச்செய்தியை கேள்விப்பட்டவுடன் கருப்பு பணம் வைத்திருக்கும் பலரும் கோமா நிலைக்கு தள்ளப்பட்டிருப்பர், ஏனெனில் அப்பணம் இப்போதைக்கு வெற்றுக் காகிதம் ஆகியிருக்கும் என்றும், பலரும் தாங்கள் சேர்த்து வைத்திருந்த அப்பணத்தை அழுதபடியே கட்டிப்பிடித்துக்கொண்டு இருப்பர்’ என்று கூறியுள்ளார்.
ஆயினும் தினக்கூலியாக வேலை செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர், அவர்கள் தங்களது அன்றாட தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வர் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.