தற்போதைய சிக்கல் நிறைந்த வாழ்க்கைமுறை அமைதியான மனநிலையையும் உடல் நலத்தையும் பெறுவதற்கு தடையாக உள்ளது. இந்நிலையில் உடல்நலத்தின்மீது அக்கறை கொண்டவர்கள் தங்களது உடல்நலத்தைப் பற்றி கனவு காண்பதைக் காட்டிலும் ஒரு ஒழுங்குமுறைக்கு உட்பட்டு வாழ வேண்டும். இதயத்தைப் பாதிக்கும் முக்கிய நோய்களைப்பற்றி பார்க்கலாம்.
கரோனரி ஆர்டெரி நோய் :
ஆர்டெரியின் சுவர்களில் கொழுப்பு படிவதால் அது குறுகி விடுகிறது. தீங்கு விளைவிக்கும் எல்.டி.எல் கொழுப்பைக் குறைப்பதன் மூலமாக கரோனரி ஆர்டெரி நோய்களைக் கட்டுப்படுத்த முடியும். மாரடைப்புக்கு ஆளானவர்கள், பைபாஸ் அல்லது ஆன்ஜியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் எல்.டி.எல் கொழுப்பின் அளவை 70 மில்லி கிராமுக்கும் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதிக ரத்த அழுத்தம் :
அதிக ரத்த அழுத்தமானது மாரடைப்பு, இதய செயலிழப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றுக்கு காரணமாக இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக சிறு நீரக செயலிழப்பு, தூக்கத்தில் சுவாச பிரச்சினைகள், என்டோகிரைன் கட்டிகள் அல்லது சிறுநீரக ஆர்டெரியில் தடைகள் உருவாகுதல் ஆகியவற்றுக்கும் காரணமாக இருக்கிறது. இந்த பாதிப்புகளிலிருந்து அதிக ரத்த அழுத்தம் கொண்ட இளைஞர்களை பாதுகாக்க வேண்டும். அதிக அழுத்தமானது மரபுவழியாக வந்ததாகவும் இருக்கலாம்.
நீரிழிவுக்கு முன்னும் பின்னும் :
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுவதால் இதய நோய்கள், சிறுநீரக நோய்கள், பக்கவாதம் மற்றும் கண் நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தற்போது இந்தியா உலக அளவில் நீரிழிவின் தலைநகரமாக விளங்கி வருகிறது. குறைந்த கலோரிகளைக் கொண்ட உணவு, உணவில் சர்க்கரையின் அளவையும் கார்பனேற்றம் செய்யப்பட்ட குடிபானங்களையும் குறைத்துக்கொள்வது, தினசரி உடற்பயிற்சி ஆகியவற்றால் நீரிழிவை தடுக்கமுடியும்.
நீரிழிவு குடும்ப வழியாக தொடர்வதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 100 மில்லி கிராமுக்கும் குறைவாக இருக்க வேண்டும். நீரிழிவு பிரச்சினை இருப்பின், எல்.டி.எல் கொழுப்பின் அளவு 70 மில்லி கிராமுக்கு குறைவாக இருப்பதோடு ரத்த அழுத்தத்தின் அளவு 130/80 என்ற அளவுக்குள் இருக்கவேண்டும்.
உடல் பருமன் :
உடல்பருமனானது நீரிழிவு, அதிக ரத்த அழுத்தம் மற்றும் கரோனரி ஆர்டெரி நோய்களுக்கு காரணமாக இருக்கிறது.
தூக்கத்தில் சுவாச பிரச்சினைகள் :
தூக்கத்தில் ஏற்படும் சுவாசப் பிரச்சினைகளால், உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனின் அளவு குறைகிறது. அப்போது உடலில் பதற்றத்திற்கான ஹார்மோன்கள் சுரக்கின்றன. இதனால் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த சுவாசப்பிரச்சினையை கண்டறிவது எளிதல்ல. நோயாளியை மருத்துவமனையில் அனுமதித்து அவர் தூங்கும்போது மட்டுமே பரிசோதனைகளை செய்யமுடியும். சி.பி.ஏ.பி கருவியை பயன்படுத்துவதும் உடல் எடையைக் குறைப்பதும் இந்த பிரச்சினைக்கு தீர்வுகள் ஆகும்.
இவற்றில் பெரும்பாலானவை வாழ்க்கை முறையால் ஏற்படும் நோய்கள் ஆகும். கீழ்காணும் வழிமுறைகளைக் கடைபிடித்து இந்த நோய்களைக் கட்டுப்படுத்த முடியும்.
1. புகைப்பழக்கத்தை நிறுத்துவது
2. தொடர்ச்சியான உடற்பயிற்சி
3. இதயத்திற்கு நலம் அளிக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை உண்பது
4. உடல் எடையை குறைப்பது
5. பதற்றத்தைக் குறைப்பது
6. உணவில் உப்பின் அளவை குறைப்பது, கார்பனேற்றம் செய்யப்பட்ட குடிபானங்களைத் தவிர்ப்பது மற்றும் மதுப்பழக்கத்தை தவிர்த்தல்
7. அடிக்கடி மருத்துவ பரிசோதனைகள் செய்துகொள்வது.