எல்லா வயதினருக்கும் மனச்சோர்வு ஏற்படும். குழந்தை மற்றும் டீன் ஏஜ் பிரிவினருக்கு ஏற்படும் மனச்சோர்வு கோளாறு (Depressive Disorder) குறித்து இப்போது பார்க்கலாம்.
குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்டவருக்கு, 3 வகை மனச்சோர்வு கோளாறுகள் ஏற்படலாம்.
1. தீவிர மனச்சோர்வு கோளாறு (Major Depressive Disorder)
2. தொடர்ந்திருக்கும் மனச்சோர்வு கோளாறு (Persistent Depressive Disorder)
3. சீா்குலைக்கும் மனநிலை கோளாறு (Disruptive Mood Dysregulation Disorder)
குழந்தைகள் வளரும் பருவத்தில், குறிப்பாக டீன் ஏஜ் பருவத்தில் அவ்வப்போது சோகமாக உணர்வது இயற்கையே. பிரச்சனைகள் மற்றும் தோல்விகளை சந்திக்கும் போது கவலையாகவும் கோபமாகவும் உணா்வதும் இயல்பே. நாளாக ஆக, இவ்வித எதிர்மறை உணா்வுகள் மறைந்து போய்விடும். இது எல்லோரும் அன்றாட வாழ்வில் சந்திக்கும் உணா்வுகள்தான். ஆனால், சோகம்/ மனவருத்தம்/ எரிச்சல் மனநிலை பலநாட்கள்/
வாரங்கள் தொடா்ந்து நீடித்து, அன்றாட வாழ்க்கை, பள்ளி படிப்பு, நட்பு போன்றவற்றை பாதிக்கும் போது, அது மனச்சோர்வு கோளாறாக இருக்கலாம். குறிப்பாக, ஏற்கெனவே விருப்பப்பட்டு ஈடுபட்ட விஷயங்களில் பிடித்தம் இல்லாமல் போவது ஒரு முக்கிய அறிகுறி.
வேறு முக்கிய அறிகுறிகள்…
1. காரணமின்றி மிகுந்த கவலை அடைவது
2. சிறு வேலைகளை செய்வதற்குக் கூட தெம்பில்லாமல் சோர்ந்து போவது
3. முன்பு சந்தோஷம் கொடுத்த விஷயங்களை இப்போது ரசிக்க முடியாமல் போவது
4. குடும்பம் / நண்பர்களுடன் ஒட்டாமல் தனித்திருப்பது
5. ஒருவித எரிச்சல் உணா்வுடனே இருப்பது
6. யோசிக்கவோ / கவனமோ செலுத்த முடியாமை
7. குறிப்பிடத்தக்க எடை அதிகரித்தல் / குறைதல் (குழந்தைகள் எதிர்பார்த்த அளவு எடை ஏறாமல் இருப்பது). எ.டு: ஒரு மாத காலத்தில், எடையில் 5 சதவிகிதம் வரை மாறுதல் தெரிவது)
8. சாப்பிடுவதில் மிகக்குறைந்த / அதிக ஆர்வம்
9. தூங்கும் பழக்கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் (தூக்கம் வருவதிலோ / எழுந்து கொள்வதிலோ பிரச்னை)
10. குற்றவுணா்வு / தாழ்வு மனப்பான்மை (எதற்கும் தகுதியில்லாதது போன்ற உணர்வு)
11. சிகிச்சையளித்தும் பயனளிக்காத உடல்ரீதியான தொந்தரவுகள் / வலிகள்
12. சாவு / தற்கொலை எண்ணங்கள்
13. அழுவது
14. தனிமையாக உணர்வது
15. தொடர் கவலை / நம்பிக்கையற்ற நிலை
16. பள்ளி, குடும்பம், நண்பர்களுடன் எந்த செயல்பாடுகளிலும் திறன்பட செயல்படமுடியாத நிலை.
மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளில் 5க்கு மேற்பட்ட அறிகுறிகள் 2 வாரத்துக்கு மேல் தொடர்ந்து காணப்பட்டால், அது தீவிர மனச்சோர்வு கோளாறாக இருக்க வாய்ப்புண்டு. பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமல்ல… சுற்றி இருப்பவர்களுக்கும் கோளாறின் அறிகுறிகள் வெளிப்படையாக தெரியும்.