இந்த வாகனத்தில்தான் ஜனாதிபதி டிரம்ப் பயணம் மேற்கொள்வார்: வெளியானது புகைப்படம்

அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு பதவியேற்பதை முன்னிட்டு அவருக்காக பிரத்யேக வாகனம் ஒன்றை தயாரித்துள்ளனர்.

‘The Beast’ என்ற புனைப்பெயரில் அறியப்படும் குறித்த வாகனமானது தற்போது பரிச்சார்த்தமாக செயல்படுத்தி பார்க்கப்பட்டு வருகின்றது.

அடுத்த ஆண்டு டிரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டதும் குறித்த வாகனத்தை அவரது பயன்பாட்டிற்காக வழங்கப்பட உள்ளது.

இதற்காக General Motors நிறுவனம் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க குறித்த வல்லுநர்களிடம் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க ஜானதிபதியின் அதிகாரப்பூர்வ வாகனமானது கறுப்பு வண்ணத்திலே இருக்கும், ஆனால் தற்போது பரிச்சார்த்தமுறையில் இருப்பதால் வேறுபட்ட வண்ணத்தில் குறித்த வாகனம் வீதி வலம் வருவதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி ஒபாமா பயன்படுத்திய காரில் இருக்கும் அனைத்து வசதிகளும் இந்த காரிலும் இருக்கும் என்றாலும், தற்கால தேவைக்கு ஏற்ற வகையில் சிறு மாறுதல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் எந்தெந்த வசதிகள் உள்ளடக்கியுள்ளனர் என்பது குறித்த தகவல்களை மிக ரகசியமாக பாதுகாத்து வருகின்றனர்.

இதுவரை எந்த வாகன கட்டுமான நிறுவனமும் இதுகுறித்த தகவல்களை வெளியிடவில்லை என்றபோதும் General Motors நிறுவனத்திற்கு 3 வாகனம் வடிவமைத்து கட்டுமானத்திற்கான ஒப்பந்தம் கிட்டியுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

மட்டுமின்றி குறித்த நிறுவனத்திற்கு 15 மில்லியன் டொலர் கட்டணமும் செலுத்தியுள்ளதாக தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

உலகின் மிக முக்கிய நகரங்களில் ஒன்று வீதம் 12 கார்களை 12 நகரங்களில் நிறுத்தி பராமரிக்க அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கென வாகனம் ஒன்றிற்கு 1.5 மில்லியன் டொலர்கள் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதி ஒபாமா பயன்படுத்தும் காரானது மொத்தமாக 8 டன் எடை கொண்டது எனவும் இது Boeing 747 விமானத்தின் கதவின் எடைக்கு சமானம் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.