உடல் பருமனை குறைத்து மக்களின் உடல் நலனை பேணும் வகையில் அனைத்து இனிப்பு பானங்களினதும் விற்பனையை தடை செய்வது குறித்து இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவைகள் அமைப்பு பரிசீலனை செய்து வருகின்றது.
இத்திட்டத்தை எதிர்வரும் ஆண்டுமுதல் நடைமுறைப்படுத்த எதிர்ப்பார்த்துள்ள அதேவேளை, இதனை வைத்தியசாலைகளில் இருந்து ஆரம்பிக்க எதிர்ப்பார்த்திருப்பதாக சுகாதார சேவைகள் அமைப்பின் தலைவர் சைமன் ஸ்டீவன்ஸ் தெரிவித்தார்.
உடல் பருமன் என்பது நாட்டில் பாரிய பிரச்சினையாக தோற்றம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்பிரச்சினையை சமாளிக்கும் வகையிலேயே இனிப்பு பானங்களுக்கு தடை விதிக்கப்படுவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அதன் முதல் கட்டமாகவே வைத்தியசாலைகளில் இனிப்பு பானங்கள் விற்பனையை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விரைவில் இவ்விற்பனை தடை செய்யப்படும் அல்லது இனிப்பு பானங்கள் மீதான வரி உயர்த்தப்படும் என்றும் ஸ்டீவன்ஸ் குறிப்பிட்டார்.